திருபுவனையில் சாராய கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம்


திருபுவனையில் சாராய கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2018 3:30 AM IST (Updated: 11 Oct 2018 2:02 AM IST)
t-max-icont-min-icon

திருபுவனையில் புதிதாக திறக்கப்பட்ட சாராய கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம் நடத்தினர்.

திருபுவனை,

திருபுவனை மதகடிப்பட்டு பாளையம் ஊரல் குட்டை பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதிதாக சாராயக்கடை திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நேற்று காலை மதகடிப்பட்டு பாளையத்தை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட பெண்கள் சாராய கடை அருகே திரண்டனர். அவர்கள் கடையை அங்கிருந்து அகற்றக்கோரி கோ‌ஷமிட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், சாராய கடையை அடித்து நொறுக்கப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்–இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சாராய கடையால் தங்கள் பகுதியில் உள்ள ஆண்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். இதனால் குடும்பம் பாதிக்கப்படுகிறது. பலர் சாராயம் குடித்து உடல்நலம் பாதித்து இறக்கின்றனர். எனவே சாராய கடையை மூடினால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று பெண்கள் கூறினர்.

இதுபற்றி கலால்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் பேசி, நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்துசென்றனர். சாராய கடைக்கு எதிராக பெண்கள் போராடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், சாரா கடையை விரைவில் அகற்றவில்லை என்றால் சுற்றுப்பகுதியை சேர்ந்த பெண்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.


Next Story