ஓசூரில் ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்


ஓசூரில் ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2018 10:45 PM GMT (Updated: 10 Oct 2018 9:16 PM GMT)

ஓசூரில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

ஓசூர்,

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நேற்று நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட கிளை சார்பில், ஓசூரில் ராயக்கோட்டை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் ஆர்.துரை தலைமை தாங்கி பேசினார். வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் தண்டபாணி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் சீனிவாசலு, இன்சூரன்ஸ் ஊழியர் சங்க செயலாளர் வி.ஹரிணி, மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த நிர்வாகிகள் வாழ்த்தி பேசினார்கள்.

இந்த போராட்டத்தின்போது, உச்சநீதி மன்ற தீர்ப்புக்கேற்ப, ஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்கக்கூடாது, புதிய

ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓசூர், சூளகிரி மற்றும் தேன்கனிக்கோட்டை வட்டங்களில் ஓய்வூதியர்களுக்கு, மலைவாழ் மற்றும் குளிர்கால படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில், ஓய்வூதியர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில், முனிரத்தினம் நன்றி கூறினார்.

Next Story