பெற்றோர் எதிர்ப்பால் வீட்டில் இருந்து தப்பி வந்தனர் காரை மரத்தில் மோதி காதல் ஜோடி தற்கொலை முயற்சி


பெற்றோர் எதிர்ப்பால் வீட்டில் இருந்து தப்பி வந்தனர் காரை மரத்தில் மோதி காதல் ஜோடி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 12 Oct 2018 3:00 AM IST (Updated: 12 Oct 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

பெற்றோர் எதிர்ப்பால் வீட்டில் இருந்து தப்பி வந்த காதல் ஜோடி, காரை மரத்தில் மோதி தற்கொலைக்கு முயன்றனர். இதில், பலத்த காயமடைந்த மைனர் பெண், காதலனுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

மங்களூரு,

பீதர் மாவட்டம் உம்னாபாத் தாலுகா ஹல்லிகோடு கிராமத்தை சேர்ந்தவர் சரணய்யா (வயது 25). இவரும் அதேப்பகுதியை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 5-ந்தேதி இருவரும் வீட்டில் இருந்து தப்பி வந்தனர்.

அவர்கள், தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார்கள். அப்போது அவர்கள், தாங்கள் கணவன்-மனைவி என்று தங்கும் விடுதி நிர்வாகிகளிடம் தெரிவித்து இருந்தனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தங்கும் விடுதி நிர்வாகிகள், கடந்த 8-ந்தேதி விடுதியை காலி செய்துவிட்டு செல்லும்படி அவர்களிடம் தெரிவித்தனர்.

இதற்கிடையே, மைனர் பெண்ணின் குடும்பத்தினர் உம்னாபாத் போலீசில் புகார் கொடுத்திருந்தனர். அதில், தங்கள் மகளை சரணய்யா கடத்தி சென்றுவிட்டதாகவும், மகளை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் தெரிவித்தனர். அதன்பேரில் உம்னாபாத் போலீசார் 2 பேரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில், காதல் ஜோடி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி, அவர்கள் தர்மஸ்தலாவில் இருந்து காரில் சுப்பிரமணியா நோக்கி சென்றனர். அவர்கள் காரை மரத்தில் மோத செய்து தற்கொலை செய்ய திட்டமிட்டிருந்தனர்.

அதன்படி, சுப்பிரமணியா அருகே காரை மரத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தினர். இதில், மைனர் பெண் பலத்த காயமடைந்தார். சரணய்யாவும் காயமடைந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சுப்பிரமணியா போலீசார் விரைந்து வந்து, மைனர் பெண் மற்றும் சரணய்யாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காதல் ஜோடியான அவர்கள் வீட்டில் இருந்து தப்பி வந்து, காரை மரத்தில் மோதி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து சுப்பிரமணியா போலீசார் இதுகுறித்து இருவரின் வீட்டாருக்கும், உம்னாபாத் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

Next Story