வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அடுத்த மாதம் 20-ந்தேதி வரை அவகாசம் தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அடுத்த மாதம் 20-ந்தேதி வரை அவகாசம் தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Oct 2018 4:00 AM IST (Updated: 12 Oct 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நேற்று முன்தினம் முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 20-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதே போல், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி இப்போது பெயர் சேர்த்தல், திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த பணிகள்அடுத்த மாதம் (நவம்பர்) 20-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மனுக்களை பரிசீலித்து டிசம்பர் 20-ந் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பெயர்களை சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்தல் ஆகியவற்றை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை வருகிற ஜனவரி மாதம் 3-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் ஜனவரி 4-ந் தேதி வெளியிடப்படும். இந்த பெயர் சேர்த்தல், திருத்தம் செய்யும் பணிக்கு முந்தைய பணிகளான விண்ணப்ப படிவங்களை அச்சிடுதல், பயிற்சி ெபாருட்கள் தயாரிப்பு ஆகியவை முடிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்கள் சம்பந்தப்பட்ட முகவரிகளில் இருக்கிறார்களா? என்று ஆய்வு செய்வார்கள். வாக்காளர்கள் மரணம் அடைந்திருந்தாலோ அல்லது வீட்டை காலி செய்து, வேறு பகுதிக்கு சென்றுவிட்டாலோ அத்தகைய வாக்காளர்களின் பெயர்கள் திருத்தப்படும்.

18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதியுடன் 18 வயது பூர்த்தி அடைபவர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். இந்த பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்யும் பணி குறித்த கால இடைவேளையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வாக்குச்சாவடி கட்டிடங்களை நேரில் பார்வையிட்டு அதற்கேற்ப புதிய வாக்குச்சாவடிகளை அமைப்பது குறித்து முடிவு செய்கிறார்கள். வாக்காளர் பட்டியல் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளிடம் வழங்கும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் ஏதாவது தவறு இருந்தால், அவை சரிசெய்யப்படும்.

வாக்காளர் பட்டியலை சரிபார்க்க பூத் அளவில் நிர்வாகிகளை நியமிக்கும்படி அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் கூறி இருக்கிறோம். கர்நாடகத்தில் தற்போது 224 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 5 கோடியே 3 லட்சத்து 40 ஆயிரத்து 159 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 54 லட்சத்து 87 ஆயிரத்து 796 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 48 லட்சத்து 47 ஆயிரத்து 645 பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 4 ஆயிரத்து 718 பேரும் உள்ளனர்.

இந்த மொத்த வாக்காளர்களில் 18 வயது முதல் 20 வயதுடைய வாக்காளர்கள் 4 லட்சத்து 65 ஆயிரத்து 866 பேர் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2 லட்சத்து 68 ஆயிரத்து 54 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 97 ஆயிரத்து 749 பேரும், மூன்றாம் பாலினத்தினர் 63 பேரும் உள்ளனர்.

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1,000 ஆண்களுக்கு 973 பெண்கள் என்ற விகிதத்தில் இருக்கிறார்கள். வாக்காளர் பட்டியல்படி 1,000 ஆண் வாக்காளர்களுக்கு நிகராக 975 பெண் வாக்காளர்கள் உள்ளனர். உதவி கலெக்டர், தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சிகளில் வார்டு அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் கிடைக்கிறது.

இந்த வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்களின் பெயர் இருக்கிறதா? என்பதை பார்த்து தெரிந்துகொள்ள முடியும். ஆன்லைன் மூலமாகவும் இ்ந்த தகவலை தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு சஞ்சீவ்குமார் கூறினார்.

Next Story