பயிர் காப்பீடு திட்டத்தில் சேர நவம்பர் 30-ந் தேதி கடைசி நாள்


பயிர் காப்பீடு திட்டத்தில் சேர நவம்பர் 30-ந் தேதி கடைசி நாள்
x
தினத்தந்தி 11 Oct 2018 10:15 PM GMT (Updated: 11 Oct 2018 8:57 PM GMT)

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் சேர வருகிற நவம்பர் மாதம் 30-ந் தேதி கடைசி நாளாகும்.

கரூர்,

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் 2018-ம் ஆண்டில், தமிழ்நாட்டில் ராபி பருவத்தில் நெல் (சம்பா) பயிருக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி நடப்பாண்டில், கரூர் மாவட்டத்தில் நெல் பயிரில் கரூர் வட்டாரத்தில் 26 கிராமங்களும், தாந்தோணி வட்டாரத்தில் 20 கிராமங்களும், அரவக்குறிச்சி வட்டாரத்தில் 3 கிராமங்களும், க.பரமத்தி வட்டாரத்தில் 12 கிராமங்களும், குளித்தலை வட்டாரத்தில் 24 கிராமங்களும், தோகைமலை வட்டாரத்தில் 9 கிராமங்களும், கடவூர் வட்டாரத்தில் 8 கிராமங்களும் மற்றும் கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் 16 கிராமங்களும், என கரூர் மாவட்டத்தில் 118 வருவாய் கிராமங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் இணைந்து பயன் பெற்றிட நெல் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் தகுதியுடையவர்களாவர். அதன்படி கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் அரசு பொது சேவை மையங்கள் மூலமாக பதிவு செய்து இத்திட்டத்தில் இணையலாம்.

இதற்கு நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நில உடமை ஆவணங்கள், அடங்கல் (பயிர் சாகுபடி சான்று), ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், பதிவு விண்ணப்பம் மற்றும் முன் மொழிவு படிவம் ஆகிய ஆவணங்கள் சமர்ப்பித்து இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம். கடன் பெறும் மற்றும் கடன் பெறா நெல் சாகுபடி விவசாயிகள் அனைவரும் இந்த திட்டத்தில் இணைத்து கொள்ளலாம். எதிர் பாராத கூடுதல் மழை, வெள்ளச்சேதம் ஆகிய இயற்கை இடர்பாடுகளில் இருந்து பாதுகாப்பு பெற்றிட இத்திட்டம் உறுதுணையாக இருக்கும்.

இந்த திட்டத்தில் சேர நவம்பர் மாதம் 30-ந் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் இறுதி நேர நெரிசல்கள் மற்றும் வலைதள பதிவேற்றம் உள்ளிட்ட இன்னல்களிலிருந்து விடுபட அனைத்து நெல் சாகுபடி விவசாயிகளும் உடன் இத்திட்டத்தில் இணைந்திட வேண்டும். இதில் சேருவதற்காக செலுத்த வேண்டிய பிரீமியம், பயிர் காப்பீட்டு தொகையில் 1.5 சதவீதம் மட்டுமே. அதாவது ஏக்கருக்கு ரூ.443.25 ஆகும். இழப்பீட்டுக்கு தகுதி பெறும் போது ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.29,550 பெறலாம். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story