மாவட்ட செய்திகள்

கூட்டணி ஆட்சியில் இருந்து பகுஜன் சமாஜ் விலகியது பள்ளி கல்வித்துறை மந்திரி ‘திடீர்’ ராஜினாமா அரசுக்கு ஆதரவு தொடரும் என்று அறிவிப்பு + "||" + From coalition rule Bahujan Samaj withdrew School Education Minister Sudden Resignation Announcement that the government will continue to support it

கூட்டணி ஆட்சியில் இருந்து பகுஜன் சமாஜ் விலகியது பள்ளி கல்வித்துறை மந்திரி ‘திடீர்’ ராஜினாமா அரசுக்கு ஆதரவு தொடரும் என்று அறிவிப்பு

கூட்டணி ஆட்சியில் இருந்து பகுஜன் சமாஜ் விலகியது பள்ளி கல்வித்துறை மந்திரி ‘திடீர்’ ராஜினாமா அரசுக்கு ஆதரவு தொடரும் என்று அறிவிப்பு
கூட்டணி ஆட்சியில் இருந்து பகுஜன் சமாஜ் விலகியது. அக்கட்சியை சேர்ந்த கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி என்.மகேஷ் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அதே நேரத்தில் அரசுக்கு ஆதரவு தொடரும் என்றும் தெரிவித்தார்.
பெங்களூரு,

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி-பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 20 தொகுதிகளில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி, சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளர் என்.மகேஷ் மட்டும் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.


தோ்தலுக்கு பிறகு காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைத்தது. குமாரசாமி முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். குமாரசாமியின் மந்திரிசபையில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த என்.மகேசுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது. அவருக்கு மிக முக்கியமான பள்ளி கல்வித்துறை இலாகா ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் இடையே இருந்த கூட்டணி சுமுக உறவில் திடீரென்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்தார்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் மந்திரி என்.மகேஷ், கடந்த வாரத்திற்கு முன்பு காங்கிரஸ் கட்சியை பகிரங்கமாக விமர்சித்து பேசினார். அதைத்தொடர்ந்து முதல்-மந்திரி குமாரசாமியை பெங்களூருவில் நேற்று சந்தித்து பேசிய மந்திரி என்.மகேஷ், தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை வழங்கினார்.

சொந்த காரணங்களால் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக அந்த கடிதத்தில் என்.மகேஷ் குறிப்பிட்டுள்ளார். இந்த 4 மாதங்கள் தனக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக குமாரசாமிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நீடிக்கக்கூடாது என்ற காரணத்தினால், மாயாவதி உத்தரவின்படி என்.மகேஷ் மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் கூட்டணி ஆட்சியில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி விலகி இருக்கிறது. தனது ராஜினாமா குறித்து என்.மகேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் மந்திரியான பிறகு எனது தொகுதி மக்களின் பிரச்சினைகளை சரியான முறையில் தீர்க்க முடியவில்லை. தொகுதியில் அதிக நேரத்தை செலவழிக்க முடியவில்லை. மேலும் எங்கள் கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட முடியவில்லை.

எனது தொகுதியில் மக்கள், என்.மகேஷ் வெற்றி பெற்றதும் பெங்களூருவுக்கு சென்றுவிட்டார் என்று பேசத் தொடங்கிவிட்டனர். தொகுதியில் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்றும், கட்சியை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலும் மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளேன். எனது ராஜினாமாவுக்கு வேறு எந்த காரணமும் இல்லை.

நாடாளுமன்ற தேர்தல் வருவதால், கட்சியை வளர்க்கும் பொறுப்பு என் மீது உள்ளது. மந்திரிசபையில் இருந்து விலகினாலும், கூட்டணி ஆட்சிக்கு எனது ஆதரவு உண்டு. இடைத்தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்.

ராஜினாமா செய்தது எனது தனிப்பட்ட முடிவு. பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று குமாரசாமி என்னிடம் கூறினார். ஆயினும், சொந்த தொகுதியில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால், பதவியில் நீடிக்க இயலவில்லை என்று கூறினேன். அதை முதல்-மந்திரி ஏற்றுக்கொண்டார். இவ்வாறு என்.மகேஷ் கூறினார்.

கூட்டணி ஆட்சியில் இருந்து பகுஜன் சமாஜ் விலகினாலும், குமாரசாமி அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.