சபரிமலைக்கு பெண்களை இருமுடி கட்டி அழைத்து செல்லக்கூடாது அய்யப்ப குருசாமிகள் கூட்டத்தில் தீர்மானம்


சபரிமலைக்கு பெண்களை இருமுடி கட்டி அழைத்து செல்லக்கூடாது அய்யப்ப குருசாமிகள் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 11 Oct 2018 11:00 PM GMT (Updated: 11 Oct 2018 9:24 PM GMT)

சபரிமலைக்கு பெண்களை இருமுடி கட்டி அழைத்து செல்லக் கூடாது என்று தர்மபுரியில் நடந்த அய்யப்ப குருசாமிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அய்யப்ப குருசாமிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் தர்மபுரி பொன்னி ஓட்டல் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக அய்யப்ப பக்தர்கள் பேரவையின் நிறுவனத்தலைவர் முனுசாமி தலைமை தாங்கினார். குருசாமிகள் வேதன், கைலாசம், முருகேசன், சுகுமார், மாதையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சண்முகம் வரவேற்று பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களை சேர்ந்த அய்யப்ப குருசாமிகள் பங்கேற்று அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்கு செல்ல அனுமதிப்பது தொடர்பான தீர்ப்பு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்கள். சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும். கேரள அரசும், தேவசம்போர்டும் அதற்கான மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.

சபரிமலைக்கு 10 வயதிற்கு மேல் 50 வயது வரை உள்ள பெண்கள் செல்ல விரும்பினால் அவர்களுக்கு மாலை அணிவிப்பது, இருமுடி கட்டுவது, வாகனங்களில் உடன் அழைத்து செல்வது ஆகிய செயல்களில் குருசாமிகள் ஈடுபடக்கூடாது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புபடி சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்த வேண்டும்.

தமிழக அய்யப்ப பக்தர்கள் பேரவை சார்பில் முதல் கட்டமாக சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவை கண்டித்து தர்மபுரியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் குருசாமிகள் முனுசாமி, சபரிராஜன், அண்ணாதுரை, பழனி, முருகன், ராமசாமி, தொப்பலாகவுண்டர், சக்திவேல், ஜெயவேல் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் ராஜா நன்றி கூறினார்.

Next Story