திருபுவனை பகுதியில் ரூ.7 லட்சத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணி கவர்னர் கிரண்பெடி தொடங்கி வைத்தார்


திருபுவனை பகுதியில் ரூ.7 லட்சத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணி கவர்னர் கிரண்பெடி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 11 Oct 2018 10:12 PM GMT (Updated: 11 Oct 2018 10:12 PM GMT)

திருபுவனை பகுதியில் ரூ.7 லட்சம் செலவில் வாய்க்கால் தூர்வாரும் பணியை கவர்னர் கிரண்பெடி தொடங்கிவைத்தார்.

திருபுவனை,

வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் புதுவையில் உள்ள வாய்க்கால், ஏரிகளை தூர்வார கவர்னர் கிரண்பெடி நடவடிக்கை எடுத்து வருகிறார். பாகூர் வாய்க்காலை தூர்வார அரசிடம் போதுமான நிதி இல்லை என்பதை தொடர்ந்து தனியார் பங்களிப்புடன் அந்த வாய்க்காலை தூர்வார கவர்னர் நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து அந்த வாய்க்கால் தூர்வாரப்பட்டது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் இருந்து திருபுவனைக்கு வரத்து வாய்க்கால் உள்ளது. 11 கிலோ மீட்டர் செல்லும் இந்த வாய்க்கால் மூலம் ஆண்டியார்பாளையம், கலித்தீர்த்தாள்குப்பம், திருவண்டார்கோவில், கொத்தபுரிநத்தம் உள்ளிட்ட ஏரிகளுக்கு மழைக்காலங்களில் தண்ணீர் வருகிறது.

இந்த வாய்க்காலில் செடிகொடிகள் முளைத்து தூர்ந்து போனதால் இதனை தூர்வார கவர்னர் கிரண்பெடியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து வளவனூர் வாய்க்காலை தூர்வார திருபுவனை பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்று கவர்னர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து திருவண்டார்கோவிலில் உள்ள வீட்டு உபயோக பொருள் தயாரிக்கும் வேர்ல்புல் நிறுவனம் வாய்க்காலை தூர்வார முன்வந்தது.

புதுவை பகுதியில் ரூ.7 லட்சம் செலவில் வாய்க்கால் தூர்வார திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் தொடக்க விழா மதகடிப்பட்டு மேட்டுதெருவில் நேற்று காலை நடந்தது. இதில் கலந்துகொண்டு, தூர்வாரும் பணிகளை கவர்னர் கிரண்பெடி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கோபிகா எம்.எல்.ஏ., கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சீத்தாராமன், பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் தாமரை புகழேந்தி, உதவி பொறியாளர் பாலசுப்ரமணியன், தனியார் நிறுவன இயக்குனர் ஹரிகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story