வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் சார்பில் விவசாயிகளுக்கு பூச்சிவிரட்டி செயல் விளக்க நிகழ்ச்சி


வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் சார்பில் விவசாயிகளுக்கு பூச்சிவிரட்டி செயல் விளக்க நிகழ்ச்சி
x
தினத்தந்தி 13 Oct 2018 3:45 AM IST (Updated: 12 Oct 2018 10:55 PM IST)
t-max-icont-min-icon

கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் பல்வேறு செய்முறைகளை விவசாயிகளுக்கு செய்து காட்டி வருகிறார்கள்.

காவேரிப்பட்டணம்,

பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் பல்வேறு செய்முறைகளை விவசாயிகளுக்கு செய்து காட்டி வருகிறார்கள். அந்த வகையில் கால்வேஅள்ளி கிராமத்தில் மாணவிகள் பூச்சிவிரட்டி என்னும் தயாரிப்பை செய்துகாட்டினார்கள். இது குறித்து மாணவிகள், விவசாயிகளிடம் கூறியதாவது:-

பல வகையான செயற்கை மருந்துகளை உபயோகிப்பதால் வளம் குறைந்து மண்ணில் வளரும் பயிர்களில் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. இப்பூச்சிகளின் தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவதற்கு தயாரிக்கப்படுவதே ‘பூச்சிவிரட்டி‘ ஆகும். இதில் நொச்சி, எருக்கு, புங்கம், வேப்பம், தும்பை ஆகிய இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. கசப்புதன்மை அதிகம் உள்ளதால், இந்த இலைகள் இயற்கையாகவே பூச்சிகளை விரட்டும் தன்மையுடையவை. பயிர்களுக்கு இது மிகவும் பாதுகாப்பானதாகும்.

இந்த 5 வகையான இலைகளையும் ஒரு கையளவு எடுத்து, அதனை 5 லிட்டர் மாட்டு கோமியத்தில் 25 நாட்கள் ஊற வைத்து அதனை 3 - 5 சதவீத அளவில் இலைதெளிப்பாக பயன்படுத்தப்படும். மேலும் இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகிய மூன்றையும் அரைத்து அதனுடன் சேர்த்தால் அதன் வீரியம் மேலும் அதிகரிக்கும். இப்பூச்சிவிரட்டி இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதால் பயிர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். தொடர்ந்து அதன் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு மாணவிகள் விளக்கி கூறினார்கள்.

Next Story