ஆபரேஷன் தாமரை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த பா.ஜனதா திட்டம் பரபரப்பு தகவல்கள்


ஆபரேஷன் தாமரை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த பா.ஜனதா திட்டம் பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 13 Oct 2018 4:15 AM IST (Updated: 13 Oct 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை இழுக்க 3 குழுக்கள். ஆபரேஷன் தாமரை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு,

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளன. இந்த நிலையில் காங்கிரசில் ஜார்கிகோளி சகோதரர்கள் போர்க்கொடி தூக்கினர்.

இதனால் ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது. மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி உள்பட சுமார் 15 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியானது. அந்த எம்.எல்.ஏ.க்களை ஆபரேஷன் தாமரை மூலம் இழுக்க பா.ஜனதா தீவிர முயற்சி செய்தது.

வெளிநாட்டில் இருந்த முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூரு திரும்பினார். அவர் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டார். அதைத்தொடர்ந்து ஆட்சிக்கு எழுந்த சிக்கல் தீர்ந்தது.

இந்த நிலையில் ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள், பல்லாரி, சிவமொக்கா, மண்டியா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராமநகர் தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி எம்.எல்.சி. லிங்கப்பாவின் மகன் சந்திரசேகர் மற்றும் மண்டியாவை சேர்ந்த ஓய்வு பெற்ற உயர் அதிகாரி டாக்டர் சித்தராமையா ஆகியோர் பா.ஜனதாவில் சேர்ந்தனர்.

இந்த நிலையில் மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா மீண்டும் ஆபரேஷன் தாமரை திட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆபரேஷன் தாமரை திட்டத்தை செயல்படுத்த ஆர்.அசோக், யோகேஷ்வர் தலைமையில் ஒரு குழு, ஸ்ரீராமுலு தலைைமயில் ஒரு குழு, முன்னாள் மந்திரி உமேஷ்கத்தி, பிரபாகர் கோரே ஆகியோரது தலைமையில் ஒரு குழு என மொத்தம் 3 குழுக்களை எடியூரப்பா அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இடைத்தேர்தல் முடிவடைந்ததும் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும். அப்போது மந்திரி பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்களை எளிதாக இழுக்க முடியும் என்று பா.ஜனதா கருதுகிறது. மந்திரிசபை விரிவாக்கத்திற்கு பிறகு இந்த கூட்டணி அரசை கவிழ்த்துவிட்டு, எடியூரப்பா தலைமையில் புதிய அரசை அமைக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

பா.ஜனதா கடந்த முறை மேற்கொண்ட ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் அக்கட்சிக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டது. அதனால் இந்த முறை இந்த ஆபரேஷன் தாமரை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த பா.ஜனதா தலைவர்கள் தீவிர முயற்சியில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு, பா.ஜனதா ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு கட்சி மேலிடம் அனுமதி வழங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Next Story