டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி கிராம நிர்வாக அலுவலத்தை மாணவர்கள் முற்றுகை
ராஜபாளையம் அருகே டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பள்ளி மாணவ–மாணவிகள் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரத்தில் இயங்கும் தனியார் பள்ளியில் சோழபுரம், ஆசிலாபுரம், பணமேடு, நரிமேடு, இந்திரா காலனி, முறம்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு செல்லும் சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையில் மது அருந்தும் நபர்களில் சிலர் மாணவ–மாணவிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் நடந்து கொள்வதாக தெரிகிறது.
மேலும் சிலர் அந்த வழியாக செல்லும் மாணவிகளை கேலி செய்வதும், தகாத வார்த்தைகளால் பேசுவதும் வழக்கமாகி விட்டதாக அந்த பகுதியினர் தெரிவித்தனர். இதுகுறித்து கிராம மக்கள் சென்று தட்டிகேட்கும் பட்சத்தில் அந்த இடத்தில் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. எனவே இந்த கடையை இடமாற்றம் செய்ய கோரி கிராமமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
இந்தநிலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 6–ம் வகுப்பு மாணவன் ராஜ்குமார் மீது, மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்கள் மோதி உள்ளனர். இதனால் மாணவர் தலையில் ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மாணவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடப்பதால் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி, அப்பகுதியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடையை இடம் மாற்ற வலியுறுத்தி மாணவ–மாணவிகள் கோஷம் எழுப்பினர்.
சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் டாஸ்மாக் கடையை இடம் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.