புதிய வழித்தடத்தில் அரசு பஸ் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
புதிய வழித்தடத்தில் அரசு பஸ்சை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
க.பரமத்தி,
க.பரமத்தி ஒன்றியம் சாலிபாளையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நேற்று புதிய வழித்தடத்திற்கான அரசு பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுடன் பஸ்சில் பயணம் செய்தார். பின்னர் போக்குவரத்துத்துறை அமைச்சர் பேசியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வந்தார். அதனடிப்படையில் செயல்பட்டு வரும் தமிழக அரசு பொதுமக்களின் கோரிக்கைகள் மீது மிகுந்த கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது. 4 மாத காலமாக பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையுடன் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
பெறப்பட்ட மனுக்களின் கோரிக்கையை ஏற்று கரூரிலிருந்து வேப்பம்பாளையம், வீரணம்பாளையம், சடையம்பாளையம், புன்னம், நடுப்பாளையம், புன்னம்சத்திரம், பஞ்சயங்குட்டை, சாலிபாளையம், வேலாயுதம்பாளையம், மோளப்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கரூர் நகரத்திற்கு வந்து செல்லவும், பள்ளிகளுக்கு வந்து செல்லும் வகையில் இன்று (அதாவது நேற்று) முதல் இந்த பஸ் வழித்தடம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதிலும் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் அவசியம், அத்தியாவசிய தேவைகளுக்காக பஸ் வசதி கோரும் கிராமங்களுக்கு படிப்படியாக புதிய வழித்தடங்களை அமைத்து பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் க.பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் மார்க்கண்டேயன், துணை செயலாளர் குழந்தைசாமி, தொழிலதிபர்கள் குப்பம் செந்தில், ராஜேந்திரன், செல்வகுமார், கரூர் மண்டல போக்குவரத்து துறை பொது மேலாளர் ராஜ்மோகன், துணை மேலாளர் அற்புதஜூலியஸ், உதவி மேலாளர் சாமிநாதன், கிளை மேலாளர் ராஜேந்திரன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story