கல்லக்குடி அருகே வீடு புகுந்து சிமெண்டு ஆலை ஊழியர் மனைவியிடம் 14 பவுன் நகைகள் கொள்ளை


கல்லக்குடி அருகே வீடு புகுந்து சிமெண்டு ஆலை ஊழியர் மனைவியிடம் 14 பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 12 Oct 2018 10:18 PM GMT (Updated: 12 Oct 2018 10:18 PM GMT)

கல்லக்குடி அருகே வீடு புகுந்து சிமெண்டு ஆலை ஊழியர் மனைவியிடம் 14 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற டவுசர் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கல்லக்குடி,

திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே உள்ள பளிங்காநத்தம் பழனியாண்டி நகரில் வசித்து வருபவர் ஜெயசங்கர்(வயது54). இவர் கல்லக்குடியில் உள்ள டால்மியா சிமெண்டு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாந்தி(48). மகன் ஜாம்சுந்தர்(21) இவர் திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இன்னொரு மகன் ஜெகதீஷ் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீ்ட்டின் முன் பக்க அறையில் ஜெயசங்கரும், உள்ளே உள்ள படுக்கை அறையில் சாந்தி, அவரது மகன் ஜாம் சுந்தரும் தனித்தனி கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தனர்.

நள்ளிரவு 1.30 மணியளவில் சாந்தி கழுத்தில் இருந்து தாலிக்கொடியை யாரோ இழுப்பது போன்று தெரிய வந்தது. இதனால் அவர் திடுக்கிட்டு எழுந்தார். அப்போது டவுசர் போட்ட 2 பேர் தன் முன்னால் நிற்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். அப்போது டவுசர் கொள்ளையர்கள் சாந்தி கழுத்தில் கிடந்த 12 பவுன் தாலிக்கொடி மற்றும் 2 பவுன் தங்க சங்கிலிகளை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

பின்னர் சத்தம் கேட்டு எழுந்த மகன் ஜாம்சுந்தர், சாந்தி இருவரும் ஜெயசங்கரை எழுப்ப முன் பக்க அறைக்கு ஓடி வந்தனர்.

அப்போது ஜெயசங்கர் மூக்கில் ரத்தம் வடிந்து கிடந்ததை பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்தனர். அவரை எழுப்பி விஷயத்தை கூறியபோது அவர் தனக்கு எதுவும் தெரியவில்லை, மயக்கமாக உள்ளது என்று தெரிவித்தார். உடனடியாக வீட்டின் பின்புறம் வந்து பார்த்தபோது அங்குள்ள கதவில் உள்ள கொண்டிகள் உடைக்கப்பட்டு இருந்தன. அருகிலேயே சுத்தியல், கடப்பாரை உள்ளிட்ட பொருட்களும் கிடந்தன. கொள்ளையர்கள் வீட்டின் பின் பக்கமாக வீட்டுக்குள் புகுந்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து உடனடியாக கல்லக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜசேகர், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கல்லக்குடி போலீசார் கொடுத்த தகவலையடுத்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டார். மேலும் அர்ஜுன் என்ற மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு வீட்டில் சோதனையிடப்பட் டது. அந்த நாய் வீட்டின் பின்புறம் மற்றும் வனப்பகுதி வழியாக ஓடி வந்து திருச்சி-சிதம்பரம் மெயின்ரோட்டில் வந்து நின்றது. மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் நிருபர்களிடம் கூறுகையில், இந்த கொள்ளையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடிவருவதாகவும் விரைவில் பிடித்துவிடுவோம் எனவும் கூறினார். நள்ளிரவில் வீடு புகுந்து நடந்த இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story