வேலூர் மாநகராட்சியில் ரூ.234 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் கமிஷனர் தகவல்


வேலூர் மாநகராட்சியில் ரூ.234 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் கமிஷனர் தகவல்
x
தினத்தந்தி 14 Oct 2018 4:15 AM IST (Updated: 14 Oct 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாநகராட்சியில் ரூ.234 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கமிஷனர் விஜயகுமார் தெரிவித்தார்.

வேலூர்,

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர் திட்டப்பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி, கலெக்டர் ராமன், கமிஷனர் விஜயகுமார் உள்பட மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டம் குறித்து மாநகராட்சி கமிஷனர் விஜயகுமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

இக்கூட்டம் வேலூர் மாநகராட்சி, ஆம்பூர் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும், அரக்கோணம், திருப்பத்தூர் நகராட்சியில் மேற்கொள்ளப்படும் பாதாள சாக்கடை திட்டம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. வேலூர் மாநகராட்சியில் குடிநீர் திட்டப்பணிகளுக்கு ரூ.234 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதன் மூலம் மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளில் புதிய குடிநீர் இணைப்பு வழங்குவது, அங்கு குழாய் அமைப்பது, பழைய குழாய்களை அப்புறப்படுத்தி புதிய குழாய்கள் அமைப்பது, 16 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைப்பது போன்ற பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. அனைத்து மக்களுக்கும் சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், அவர் மழைக்காலம் வரஉள்ளதால் கால்வாய் தூர்வாருதல், சாலை அமைத்தல் போன்ற முன் எச்சரிக்கை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

ஆம்பூர் நகராட்சியில் ரூ.50 கோடியே 47 லட்சத்தில் குடிநீர் திட்ட பணிகளும், திருப்பத்தூரில் ரூ.104 கோடி, அரக்கோணத்தில் ரூ.95 கோடியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story