ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் பொதுமக்களை மீட்பது எப்படி? சோழன்திட்டை தடுப்பணையில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை


ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் பொதுமக்களை மீட்பது எப்படி? சோழன்திட்டை தடுப்பணையில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை
x
தினத்தந்தி 14 Oct 2018 4:15 AM IST (Updated: 14 Oct 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் பொதுமக்களை மீட்பது எப்படி? என்பது குறித்து சோழன்திட்டை தடுப்பணையில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

சுசீந்திரம்,

சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தையொட்டி நேற்று குமரி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக சுசீந்திரம் அருகே உள்ள சோழன்திட்டை தடுப்பணையில் தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் மட்டும் இன்றி போலீசார், வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மீன்வளத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் மின் வாரியத்தை சேர்ந்த ஊழியர்கள் பங்கேற்றனர்.

ஒத்திகையின்போது, ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினால் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு மக்களை பாதுகாப்பாக எப்படி அழைத்துச் செல்வது? என்பது பற்றி தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் பொதுமக்களை மீட்பது எப்படி? என்பது குறித்தும், திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டால் அவரை எப்படி? மீட்பது என்பது குறித்தும் தீயணைப்பு வீரர் ஒருவர் தத்ரூபமாக செய்து காட்டினார். ஒத்திகையையொட்டி அங்கு மிதவை படகு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியை கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேரில் வந்து பார்வையிட்டார். அப்போது கூடுதல் கலெக்டர் ராகுல்நாத் உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் இருந்தனர். மேலும் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் திரளாக வந்து பார்த்தனர்.

தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துவிட்டால் அதில் இருந்து தண்ணீரில் மூழ்காமல் தப்பிப்பது எப்படி? என்பது பற்றி மாணவ-மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அதாவது காலி கேன்களை எடுத்து அதை ஒரு சாக்கில் போட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் அதை கயிற்றால் உடலில் கட்டிக்கொண்டால் தண்ணீரில் மூழ்க மாட்டோம் என்பதை மாவட்ட தீயணைப்பு அதிகாரி (பொறுப்பு) சத்தியகுமார் விளக்கினார். அதோடு முதலுதவி சிகிச்சை அளிப்பது பற்றி மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்தியகுமார், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி பேச்சியம்மாள் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்து வழங்கினர்.

Next Story