ஸ்டாலினுடன் இணைந்து அ.தி.மு.க.வை தினகரன் அழிக்கப் பார்க்கிறார் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
ஸ்டாலினுடன் தினகரன் இணைந்து அ.தி.மு.க.வை அழிக்கப் பார்க்கிறார் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
மதுரை,
எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஜெயலலிதா பேரவை சார்பில் வருகிற 24–ந் தேதி பெண்கள் சைக்கிள் பேரணி மதுரை திருப்பரங்குன்றத்தில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க உள்ள பெண்களுக்கான பயிற்சி முகாம் வேலம்மாள் மருத்துவக்கல்லூரி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நேற்று நடந்தது. முகாமில் ஜெயலலிதா பேரவை செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, வளர்மதி, ராஜலட்சுமி, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோ முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏக்கள் சரவணன், மாணிக்கம், பெரியபுள்ளான், நீதிபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது கூறியதாவது:–
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி இன்று போய் விடும், நாளை போய் விடும் என எதிர்கட்சியினர் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தேசிய அளவில் 19 துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. அதை வைத்து பார்க்கும் பொழுது இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் சட்டம்– ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு சிறந்த அளவில் ஆட்சி நடந்து வருகிறது. தி,மு.க.வின் தலைவராக வாரிசுப் படி அண்ணன் அழகிரி தான் வந்து இருக்க வேண்டும். ஆனால் அண்ணனை மீறி ஸ்டாலின் தலைவராகி உள்ளார். அ.தி.மு.க.வை அழிக்கும் நோக்கில் தி.மு.க. செயல்படுகிறது.
கோடி, கோடியாக கொள்ளை அடித்த கலைஞரின் வாரிசுகள் மகாத்மா காந்தியின் வாரிசுகளை போல நடந்து கொள்கிறார்கள். தற்போது புதிய தகவல் வந்துள்ளது. அதில் ஸ்டாலினுடன், தினகரன் இணைந்து கொண்டு அ.தி.மு.க.வை அழிக்கப்பார்க்கிறார். அ.ம.மு.க.கட்சியெல்லாம் சிறிய கட்சி. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான். அவர்களுக்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:–
வருகிற 24–ந் தேதி 3 ஆயிரம் பெண்கள் கலந்து கொள்ளும் சைக்கிள் பேரணி நடைபெற உள்ளது. பெண்கள் பங்கேற்கும் இந்த பேரணியை முருகனின் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் தொடங்க உள்ளோம். தி.மு.க. தலைவர் ஸ்டாலின், முதல்–அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கூறி வருகிறார். அவர் முதல்வர் பதவிக்கு வர மிகவும் அவசரப்படுகிறார். அ.தி.மு.க.ஆட்சி அமைத்து இன்னும் 5 ஆண்டுகள் நிறைவடையாத நிலையில் அவர் பதவி ஆசையில் தான் இவ்வாறு பேசுகிறார். தேர்தலை சந்திக்க ஸ்டாலின் தயங்குகிறாரோ என்னவோ. ஆனால் நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு கூறினார்.