மாவட்ட செய்திகள்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு + "||" + If we come to power No alcohol We will create Tamil Nadu Dr. Anbumani Ramadoss speech

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
சேலம்,

சேலம் இரும்பாலை ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாணவ, மாணவிகளுடன் நடந்த நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பங்கேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-


மாணவர்கள் அனைவரும் அரசியலை தெரிந்து கொள்ள வேண்டும். அதில் விருப்பப்பட்டவர்கள் அரசியலுக்கு வரலாம். அரசியல் பற்றி தெரிந்து கொண்டால் தான் உங்களால் நல்ல தலைவர்களை தேர்வு செய்ய முடியும். தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்கள் தீட்டுபவர்கள், மக்கள் நலனில் அக்கறை கொள்பவர்கள், ஒழுக்கமுள்ளவர்கள் என நேர்மையான தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பாக தமிழகத்துக்கு நல்ல தலைவர்கள் வரவேண்டும்.

சுற்றுச்சூழல் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நமக்கு கட்டாயமாக தேவை. மேட்டூர் அணை உபரிநீரை கொண்டு சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை நிரப்பி விட்டால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பஞ்சம் தீர்வதுடன், விவசாயமும் செழிக்கும்.

சேலம் திருமணிமுத்தாறு ‘கூவமாக‘ மாறிவிட்டது. மதுவினால் 200-க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுகிறது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது என்னுடைய ஆசை. இது என்னால் முடியும். தற்போது அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் இருந்து ஆண்டுக்கு 8 லட்சம் மாணவர்கள் படித்து வெளியேறுகின்றனர். இதில் 2 லட்சம் பொறியியல் மாணவர்கள் அடங்குவர். இவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறதா? என்றால் இல்லை. 15 சதவீத பேருக்கு மட்டும் தான் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இதை போக்க மாற்றம் தேவை. இந்த மாற்றத்தை மாணவர்களால் தான் கொண்டு வரமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு அன்புமணி ராமதாஸ் பதில் அளித்து பேசியதாவது:-

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை தான் முதலில் கொண்டு வருவோம். அதன் மூலம் மது இல்லா தமிழகத்தை உருவாக்குவோம். சினிமாவில் தான் அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்குகிறார்கள், ஊழல் மற்றும் ரவுடியிசம் செய்கிறார்கள் என்று காட்டப்படுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும். நாங்கள் கல்வித்துறையில் மாற்றத்தை கொண்டு வருவோம். அறிவுசார்ந்த கல்வி, திறன் சார்ந்த கல்வி, தொழிற்சார்ந்த கல்வி முறைகளை பற்றி புரியும் வகையில் பாடத்திட்டங்களை கொண்டு வருவோம். மேலும் கல்வி சேவையை இலவசமாக கொடுப்போம்.

இதுதவிர, ‘நீட்‘ தேர்வால் தமிழக மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். நீட் தேர்வு தேவையில்லை என்று நாங்கள் மட்டும் போராடுவதை போன்று ஒட்டுமொத்த மாணவர்களாகிய நீங்களும் போராடி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஊழலை ஒழிக்க அனைத்து விண்ணப்பங்களையும் ஆன்லைன் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். சேவை உரிமை சட்டத்தை இயற்ற வேண்டும்.

அடுத்த தேர்தலை பற்றி சிந்திப்பதை விட அடுத்த தலைமுறைகளை பற்றி சிந்திக்கும் நல்ல தலைவர்களை மாணவர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ராமேசுவரம் மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர் கதையாக இருந்து வருகிறது. இதை தடுக்க மத்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். அதற்கு மறுத்தால் நாங்களே மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவோம். மேலும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்போம். தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலை கொடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், மாநில துணை பொதுச்செயலாளர்கள் அருள், கண்ணையன், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்தி, இணை செயலாளர் சத்திரியசேகர், மாநகர் மாவட்ட செயலாளர் கதிர் ராசரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.