தாறுமாறாக ஓடிய அரசு பஸ்சால் பரபரப்பு நடைமேடையில் தூங்கிய 7 பேரை காப்பாற்றிய போலீஸ்காரர்


தாறுமாறாக ஓடிய அரசு பஸ்சால் பரபரப்பு நடைமேடையில் தூங்கிய 7 பேரை காப்பாற்றிய போலீஸ்காரர்
x
தினத்தந்தி 14 Oct 2018 4:15 AM IST (Updated: 14 Oct 2018 3:35 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் தாறுமாறாக ஓடிய அரசு பஸ் நடைமேடையில் ஏறியது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் அங்கு படுத்திருந்த 7 பேரையும் காப்பாற்றினார்.

மலைக்கோட்டை,

திருச்சி சத்திரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் டவுன் பஸ் நிலையம் இயங்கி வருகிறது. இந்த பஸ் நிலையத்தில் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும், புறநகர் பகுதிகளுக்கும் 100-க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்த பஸ் நிலையம் எப்போதுமே பரபரப்பாக இருக்கும்.

இரவில் பெரும்பாலான அரசு டவுன் பஸ்களை அதன் டிரைவர்கள், பஸ் நிலையத்தின் உள்ளேயும், வெளியேயும் நிறுத்தி வைத்து விட்டு மறுநாள் அதிகாலை முதல் இயக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு சத்திரம் புறக்காவல் நிலையம் அருகே அரசு டவுன் பஸ் ஒன்றை டிரைவர் நிறுத்தினார். பின்னர் பஸ்சிலேயே டிரைவரும், கண்டக்டரும் தூங்கினர். நேற்று அதிகாலை 5 மணிக்கு டிரைவர் பஸ்சை எடுத்தார். அப்போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, நடைமேடையிலும் ஏறி இறங்கியது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது நடைமேடையில் 7 பேர் நன்றாக தூங்கி கொண்டிருந்தனர். அவர்கள் மீது பஸ் ஏறுவதுபோல சென்றது. இதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ராஜேஷ் என்பவர் பார்த்து, தூங்கி கொண்டிருந்த 7 பேரையும் தட்டி எழுப்பி வெளியேற்றினார். இதனால், அதிர்ஷ்டவசமாக 7 பேரும் உயிர்தப்பினர். பஸ்சில் சரிவர பிரேக் பிடிக்காததால், டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது தெரியவந்தது. பின்னர் ஒருவழியாக பஸ் நிறுத்தப்பட்டது. அதிகாலை வேளையில் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் இல்லை என்பதால் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் போக்குவரத்து கழக அதிகாரிகளும் விசாரித்தனர்.

Next Story