பவானிசாகர் அருகே காகித ஆலை கழிவுநீர் பவானி ஆற்றில் கலந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி


பவானிசாகர் அருகே காகித ஆலை கழிவுநீர் பவானி ஆற்றில் கலந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 15 Oct 2018 5:00 AM IST (Updated: 14 Oct 2018 7:52 PM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அருகே காகித ஆலை கழிவுநீர் பவானி ஆற்றில் கலந்ததை கண்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதனால் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பவானிசாகர்,

பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் மற்றும் ராஜன்நகர் பகுதியில் 9 காகித ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த காகித ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அந்தப்பகுதியில் நிலத்தடிநீர் மாசடைந்து உள்ளது. மேலும், விவசாயம் பாதிக்கப்பட்டதோடு இந்த நீரை குடிக்கும் கால்நடைகளுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டு உள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை பவானிசாகர் இக்கரைதத்தப்பள்ளி அருகே 2 இடங்களில் உள்ள வாய்கால்களில் காகித ஆலைக்கழிவுநீர் மழைநீருடன் கலந்து சென்றது. மேலும் அந்த கழிவுநீர் பவானி ஆற்றில் கலந்தது. அப்போது கழிவுநீர் நுரைபொங்கியபடி கடுமையான துர்நாற்றம் வீசியபடி சென்றது. இதனை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘காகித ஆலைகள் கழிவுநீரை திறந்து விடுவதால் ஊரை காலிசெய்துவிட்டு வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பவானி ஆற்றுநீரை நம்பியுள்ள 500–க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீரில் இந்த கழிவுநீர் கலப்பதால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், மாசுக்கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக கழிவுநீரை வெளியேற்றும் காகித ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில் மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றனர்.


Next Story