பெட்டிக்கடை மீது லாரி கவிழ்ந்து விபத்து: மூதாட்டி உடல் நசுங்கி பலி

மூலனூர் அருகே பெட்டிக்கடை மீது லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பெட்டிக்கடையில் இருந்த மூதாட்டி உடல் நசுங்கி பலியானார்.
மூலனூர்,
திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள ராஜீவ் நகரை சேர்ந்தவர் முருகன்(வயது 75), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நாச்சம்மாள்(70). இவர் ராஜீவ்நகரில் மூலனூர்–பழனி சாலையில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இவர்களின் மகன் ராமலிங்கம்.
நேற்று காலை 6 மணிக்கு நாச்சம்மாள் வழக்கம் போல் பெட்டிக்கடைக்கு சென்றார். அங்கு அவர் பெட்டிக்கடையை திறந்து, கடையின் உள்ளே உட்கார்ந்து வியாபாரம் செய்ய தயாரானார். அப்போது, திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையத்தில் இருந்து மூலனூர் நோக்கி விறகு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.
அந்த லாரி ராஜீவ்நகர் அருகே ஒரு வளைவில் திரும்பும் போது, எதிர்பாராத விதமாக பெட்டிக்கடை மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பெட்டிக்கடைக்குள் இருந்த நாச்சம்மாள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மூலனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து, கிரேன் மூலம் லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மூலனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் யோகேஷ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.