ஊத்துக்கோட்டை அருகே டெங்கு குறித்த கேள்விகள் கேட்டு பரிசுகள் வழங்கிய கலெக்டர்


ஊத்துக்கோட்டை அருகே டெங்கு குறித்த கேள்விகள் கேட்டு பரிசுகள் வழங்கிய கலெக்டர்
x
தினத்தந்தி 15 Oct 2018 4:15 AM IST (Updated: 14 Oct 2018 10:28 PM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை அருகே டெங்கு குறித்த கேள்விகள் கேட்டு சரியாக பதில் அளித்த மாணவர்களுக்கு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பரிசுகள் வழங்கினார்.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே உள்ள நெய்வேலி மற்றும் சதுரங்கபேட்டை பகுதிகளில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக் குமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நெய்வேலி கிராமத்தில் தெரு குழாய்களில் தண்ணீர் கசிவதை கண்டு குறையை சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் குடிநீர் தொட்டிகளில் உள்ள குடிநீரில் குளோரின் அளவுகளை ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து வீடு, வீடாக சென்று குடிநீரில் டெங்கு கொசு உற்பத்தி, வெட்ட வெளியில் கிடக்கும் டயர், உடைந்த பானைகள் மற்றும் தொட்டிகளை பார்வையிட்டார்.

அப்போது வீட்டில் படுத்து கொண்டிருந்த கூலித்தொழிலாளி பாபு என்பரின் மகன் மணிகண்டனை அழைத்து டெங்கு நோய் எவ்வாறு ஏற்படுகிறது? அதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கூறுங்கள் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக் குமார் கேள்வி கேட்டார்.

இதற்கு மாணவன் சரியான பதில் கூறினான். இதைத் தொடர்ந்து மாணவன் மணிகண்டனுக்கு கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் தனது பேனாவை பரிசாக அளித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இதனை கண்டு அங்கிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மணிகண்டன் பூண்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். மேலும் இது போன்ற கேள்விகளுக்கு சரியான பதில் அளித்த பிற மாணவர்களுக்கு பொது அறிவு சார்ந்த புத்தகங்களை வழங்கினார்.

இதனை தொடர்ந்து சதுரங்கபேட்டை அரசு பள்ளியில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி மற்றும் கழிவறையை கலெக்டர் பார்வையிட்டார். அங்கு பணியில் இருந்த துப்புரவு பணியாளர்களை கையுறை அணிந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தினார்.

மேலும் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பேசியதாவது:- டெங்கு கொசு உற்பத்தியாகக் கூடிய வகையில் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும். டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனே அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வேண்டும்.

தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறக்கூடாது. டாக்டர்கள் அளிக்கும் சீட்டு கொண்டு வரும் நோயாளிக்கு மட்டும் மருந்து கடைக்காரர்கள் மருந்து மாத்திரைகள் வழங்க வேண்டும். இதை மீறும் மருந்து கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது நிலவேம்பு குடிநீரை பொதுமக்களுக்கு அவர் வழங்கினார். அப்போது சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் கிருஷ்ணராஜ், தாசில்தார் தமிழ்செலவன், துணை தாசில்தார் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், வெங்கடேசன், வட்டார மருத்துவ அலுவலர் ராமசந்திரன் மற்றும் சுகாதார ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Next Story