தலைமை செயலாளரை சந்திக்க விவசாயிகளுக்கு அனுமதி மறுப்பு கும்பகோணத்தில் பரபரப்பு


தலைமை செயலாளரை சந்திக்க விவசாயிகளுக்கு அனுமதி மறுப்பு கும்பகோணத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Oct 2018 11:00 PM GMT (Updated: 14 Oct 2018 6:40 PM GMT)

தலைமை செயலாளரை சந்திக்க விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கும்பகோணத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் உள்ள சுவாமிநாதசாமி கோவில், திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள குருபகவான் கோவில் ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் செய்தவற்காக தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கும்பகோணத்துக்கு நேற்று வந்தார்.

கோவில்களில் சாமி தரிசனம் செய்து விட்டு கும்பகோணத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தார்.

அப்போது கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பதற்காக தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தர விமலநாதன் உள்பட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விருந்தினர் மாளிகைக்கு வந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தலைமை செயலாளரை சந்திக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதன் காரணமாக விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கும்பகோணம் குடிநீர் வடிகால் வாரிய விருந்தினர் இல்லத்தில் தங்கி இருந்த தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம், “உங்களிடம் பல முறை கோரிக்கை மனுக்களை அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், தலைமை செயலாளரை சந்தித்து மனு கொடுக்க வந்தோம்” என கூறினர். இதைத்தொடர்ந்து கலெக்டர், விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார்.

இதுகுறித்து சுந்தரவிமலநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சம்பா சிறப்பு தொகுப்பு திட்டம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனவே ரூ.350 கோடி நிதி ஒதுக்கி திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும். சர்க்கரை ஆலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகை ரூ.39 கோடியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமை செயலாளரிடம் மனு கொடுக்க இருந்தோம். ஆனால் போலீசார் தடுத்து நிறுத்தி விட்டதால் மனு கொடுக்க முடியவில்லை.

தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனுக்களை வழங்கியும் நடவடிக்கை இல்லாத காரணத்தால் தான் தலைமை செயலாளரை சந்திக்க வந்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story