காபி குடிக்க அழைத்து செல்லும்படி கூறி போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கைதி நடிகர் வடிவேலு காமெடிபோல் நடந்த சம்பவம்


காபி குடிக்க அழைத்து செல்லும்படி கூறி போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கைதி நடிகர் வடிவேலு காமெடிபோல் நடந்த சம்பவம்
x
தினத்தந்தி 15 Oct 2018 5:30 AM IST (Updated: 15 Oct 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் வடிவேலு பட காமெடியை போல், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட கைதி, காபி குடிக்க அழைத்துச் செல்லுமாறு போலீஸ்காரர்களிடம் கெஞ்சி கேட்டு பின்னர் அவர்களுடைய மோட்டார் சைக்கிளிலேயே தப்பி சென்று விட்டார்.

பிராட்வே,

சென்னை காசிமேடு விநாயகபுரத்தை சேர்ந்தவர் பாபு என்ற பல்சர்பாபு(வயது 38). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. பல்சர் பைக்கில் சென்று வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டு வந்ததால் பல்சர் பாபு என்ற அடைமொழி வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வேப்பேரி போலீசார் வழிப்பறி வழக்கில் பல்சர் பாபுவை கைது செய்தனர். பின்னர், தொடர் குற்றசெயலில் ஈடுபட்டதாக அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சிறையில் இருந்த பல்சர் பாபு, மூலம் நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் மதியம் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு கஜேந்திரன், சுந்தர் ஆகிய 2 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று அதிகாலை 6 மணி அளவில் பல்சர் பாபு, காபி குடிக்க வேண்டும் என்று பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் கூறினார். ஆனால் போலீசார் முதலில் அதற்கு மறுத்துவிட்டனர்.

ஆனால் அவர், தொடர்ந்து காபி குடிக்க வேண்டும் என அப்பாவி போல் கேட்டார். ஆனாலும் ஒரு போலீஸ்காரர், உன்னை வெளியில் அழைத்துச் செல்ல முடியாது என உறுதியாக கூறினார்.

பல்சர் பாபு, விடாமல் போலீசாரிடம் காபி குடிக்க வேண்டும் என கேட்டு கெஞ்சினார். இதனால் மனம் இறங்கிய மற்றொரு போலீஸ்காரர், ‘மருதமலை’ படத்தில் நடிகர் வடிவேலு, நடிகர் அர்ஜூனிடம் சொல்வது போல, “பாவம், காபி குடிக்கத்தானே கேட்கிறார். அழைத்துச் செல்வோம்” என்றார்.

இதையடுத்து போலீஸ்காரர்கள் கஜேந்திரன், சுந்தர் இருவரும் மோட்டார்சைக்கிளில் தங்களுக்கு நடுவில் பல்சர் பாபுவை அமர வைத்து ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் இருந்த வெளியில் அழைத்துச் சென்றனர்.

போர்ச்சுக்கல் தெருவில் உள்ள ஒரு டீ கடைக்கு அழைத்துச் சென்றனர். மோட்டார்சைக்கிளில் சாவியை எடுக்காமல் அப்படியே வைத்து விட்டு 3 பேரும் கடைக்குள் சென்று டீ கொடுக்கும்படி கேட்டனர்.

அப்போது பல்சர் பாபு, வாய் கொப்பளிப்பது போல் நடித்து, போலீசார் சற்று அசந்து இருந்த நேரத்தில் சாவியுடன் இருந்த போலீஸ்காரர்களின் மோட்டார் சைக்கிளில் ஏறி, அதில் இருந்த துப்பாக்கியை தூக்கி கீழே போட்டு விட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதை கண்ட போலீஸ்காரர்கள் கஜேந்திரன், சுந்தர் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முத்தியால்பேட்டை போலீசார் அங்கு சென்று, தீவிர விசாரணை நடத்தினர். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் பல்சர் பாபுவை கோட்டை விட்ட போலீஸ்காரர்கள் கஜேந்திரன், சுந்தர் ஆகியோரிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்சர் பாபுவை பிடிக்க, 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story