போதிய மழை பெய்யாததால் பெரம்பலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்


போதிய மழை பெய்யாததால் பெரம்பலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்
x
தினத்தந்தி 14 Oct 2018 10:30 PM GMT (Updated: 14 Oct 2018 8:01 PM GMT)

போதிய மழை பெய்யாததால் பெரம்பலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநாடு பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் மாசிலாமணி கலந்து கொண்டு தொடக்கவுரையாற்றினார். மாவட்ட செயலாளர் ஜெயராமன் சங்கத்தின் வேலை அறிக்கையை வாசித்தார். போதிய மழை பெய்யாததால் பெரம்பலூரை வறட்சி பாதித்த மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும்.

முசிறியில் ஓடும் காவிரி ஆற்றில் இருந்து கால்வாய் அமைத்து துறையூர் வழியாக பெரம்பலூர் மாவட்டத்துக்கு காவிரி நீரை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள், வரத்து வாய்க்கால்களை தூர்வாரவும், பழுதடைந்துள்ள மதகுகளை சீரமைக்கவும் பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதிய மழை பெய்யாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் விவசாயத்திற்காக கூட்டுறவு வங்கிகளிலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் தனியார் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களை மத்திய-மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும். பெரம்பலூர் மாவட்ட மின்வாரிய அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக தமிழக அரசு நிரப்ப வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக விவசாய மின் இணைப்பு வேண்டி பதிவு செய்து காத்திருப்போருக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

இதில் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சட்ட ஆலோசகர் வக்கீல் காமராசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன், தியாகராஜன் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் அழகேசன் வரவேற்றார். முடிவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பழனிசாமி நன்றி கூறினார்.

Next Story