பலகீனமான ஆட்சியில் அல்லிராணி தர்பார்; கவர்னர் மீது அன்பழகன் எம்.எல்.ஏ. தாக்கு


பலகீனமான ஆட்சியில் அல்லிராணி தர்பார்; கவர்னர் மீது அன்பழகன் எம்.எல்.ஏ. தாக்கு
x
தினத்தந்தி 15 Oct 2018 4:45 AM IST (Updated: 15 Oct 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

பலகீனமான ஆட்சியில் அல்லிராணி தர்பார் நடக்கிறது என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி,

புதுவை சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–

புதுவை கவர்னர் கிரண்பெடி தனியார் நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வு நிதியை சட்டவிரோதமாக வசூல் செய்துள்ளார் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். அதற்கு கவர்னர் கிரண்பெடி வழக்கம்போல் முன்னுக்குப்பின் முரணாக பதில்களை தெரிவித்துள்ளார். ஒரு கவர்னரின் செயல்பாடு அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு இருக்கவேண்டும்.

ஆனால் மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் தானே கவனிப்பதாக கூறிக்கொண்டு பல்வேறு நிறுவனங்களில் நன்கொடை என்ற பெயரில் கவர்னர் அலுவலகமே நிதி வசூல் செய்துள்ளது என்பது சட்டவிரோதமானது. கவர்னர் பதவிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும். இந்த பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

சமூக பொறுப்புணர்வு நிதியின் பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட சிலருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு டெண்டர் கூட வைக்கவில்லை. தங்களுக்கு வேண்டிய காண்டிராக்டர்களை வைத்து பணிகளை செய்துள்ளனர். ஏற்கனவே ஏரி, குளங்களை தூர்வாரியவர்களுக்கு ரூ.9 கோடி பாக்கி உள்ள நிலையில், இப்போது தூர்வாரியவர்களுக்கு நிதி கொடுத்தது எப்படி?

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரிகள் தூர்வாரப்படவில்லை என்று கவர்னர் கூறியுள்ளார். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஏரி, வாய்க்கால்கள் தூர்வார பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதி எங்கே போனது என்பது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதில் அளிக்க வேண்டும்.

கவர்னருக்கு எதிராக முதல்–அமைச்சர் போராடி வரும் நிலையில் ஒரு சில அமைச்சர்கள் மாண்புகளை மறந்து கவர்னரை சந்திப்பதால்தான் அவர் நிர்வாகத்தை கையில் எடுக்கிறார். பலகீனமான ஆட்சியை சவுகரியமாக எடுத்துக்கொண்டு அல்லிராணி தர்பார் நடக்கிறது. சட்டப்படி கவர்னர் யாரிடமும் நன்கொடை பெறமுடியாது. தனியார் நிறுவனங்களிடம் பணம் கேட்டு மிரட்டிய அதிகரிகள் மீது முதல்–அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.


Next Story