கூடலூரில் மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதி விபத்து


கூடலூரில் மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதி விபத்து
x
தினத்தந்தி 15 Oct 2018 4:15 AM IST (Updated: 15 Oct 2018 3:49 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் தாறுமாறாக ஓடிய கார், மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

கூடலூர்,

ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு சுற்றுலா வாகனங்கள் அதிகளவு இயக்கப்படுகின்றன. இங்குள்ள மலைப்பாதைகளில் போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் முறையாக கடைபிடிக்க போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் அதுகுறித்த விழிப்புணர்வு பலகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் ஒரு சில வாகன ஓட்டிகள் அதனை பின்பற்றுவது இல்லை. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. ஏற்கனவே போக்குவரத்து நெருக்கடி மிகுந்த கூடலூர் நகரில் வாகன விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க சாலையின் நடுவில் கான்கிரீட் தடுப்புகளை போலீசார் அடுக்கி வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக கோழிக்கோடுக்கு ஒரு கார் சென்று கொண்டிருந்தது. கூடலூர் பழைய பஸ் நிலையத்தை கடந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. தொடர்ந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி நின்றது. இதில் காரின் முன்பகுதி மற்றும் 14 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களுடன் இணைந்து போலீசார் காரை மீட்டனர். இதையடுத்து விபத்து குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story