கூடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கூடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Oct 2018 11:00 PM GMT (Updated: 14 Oct 2018 10:26 PM GMT)

கூடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கூடலூர்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்வதை கண்டித்து கூடலூர் காந்தி சிலை முன்பு நேற்று மதியம் 12.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் துயில்மேகம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், மகேசன், மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரகாஷ், பொருளாளர் ரமணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சகாதேவன், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜேந்திரபிரபு, மாவட்ட பொருளாளர் மண்ணரசன், துணை செயலாளர் மோகன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்படுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் காஞ்சனா, புவனேஷ்வர், ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கூறியதாவது:-

தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தை நசுக்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். கூடலூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பங்களை சமூக விரோதிகள் சேதப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசாரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story