கொடைக்கானலில் பலத்த மழை
கொடைக்கானலில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
கொடைக்கானல்,
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானல் பகுதியில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. அதன்பிறகு மழை குறைந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் நள்ளிரவு வரை நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக போட் கிளப்பில் 16 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இந்தநிலையில் நேற்றும் பகல் நேரத்தில் வானத்தில் மேகமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. மதியம் 12 மணி முதல் 1 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகமாக இருந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் படகு சவாரி, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமையன்று வாரச்சந்தை நடைபெறும். மழை பெய்ததால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், பொது மக்களும் மழையில் நனைந்தபடியே காய்கறிகளை வாங்கினர். பலத்த மழை காரணமாக பகல் நேரத்திலேயே கடும் குளிர் நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் அவதியடைந்த னர்.
Related Tags :
Next Story