பழனி அருகே பரிதாபம்: பன்றிக்காய்ச்சலுக்கு ரேஷன் கடை ஊழியர் பலி


பழனி அருகே பரிதாபம்: பன்றிக்காய்ச்சலுக்கு ரேஷன் கடை ஊழியர் பலி
x
தினத்தந்தி 16 Oct 2018 3:30 AM IST (Updated: 15 Oct 2018 11:30 PM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே, பன்றிக் காய்ச்சலுக்கு ரேஷன் கடை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

கீரனூர், 

பழனியை அடுத்த புளியம்பட்டி அருகே உள்ள வில்வாதம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 46). இவருடைய மனைவி சிவசெல்வி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மணிகண்டன் அதே பகுதியில் செயல்படும் ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 8 நாட்களுக்கு முன்பு மணிகண்டனுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். அதையடுத்து மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பல்வேறு பரிசோதனையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு (எச்1 என் 1) இருப்பது தெரியவந்தது.

அதையடுத்து தனிப்பிரிவுக்கு மாற்றப்பட்ட மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக மாறியது. இதனால் பதற்றமடைந்த அவரின் உறவினர்கள் மணிகண்டனை பழனி அரசு மருத்துவமனைக்கு நேற்று மாலை 4 மணிக்கு கொண்டு வந்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பழனி அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் விஜயசேகர் கூறுகையில், மணிகண்டன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது சுய நினைவு இன்றியே இருந்தார். அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகவே இருந்தது. இருந்த போதிலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார், என்றார்.

பன்றிக்காய்ச்சலுக்கு ரேஷன் கடை விற்பனையாளர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story