மணலியில் மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் சாவு


மணலியில் மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் சாவு
x
தினத்தந்தி 16 Oct 2018 4:15 AM IST (Updated: 16 Oct 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

மணலியில் மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் பரிதாபமாக உயிர் இழந்தான்.

திருவொற்றியூர்,

மணலி அன்பழகன் தெருவைச் சேர்ந்தவர் சரவணன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சுதா. இவர்களின் மகள்கள் பிரியதர்ஷினி, ரோகிணி. மகன் கவியரசன் (வயது 9).

கவியரசன் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கவியரசனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து சிறுவனின் பெற்றோர் அவனை மாதவரம் பால் பண்ணையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிறுவன் கவியரசனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தபோதும் அவனுக்கு காய்ச்சல் குறையவில்லை. இதற்கிடையே கடந்த 7-ந்தேதி சிறுவனுக்கு காய்ச்சல் அதிகமானது.

அதனை தொடர்ந்து, அவன் மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

அங்குள்ள மருத்துவர்கள் கவியரசனின் ரத்த மாதிரியை பரிசோதித்த போது அவனுக்கு மர்ம காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

அதன் பின்னர் கவியரசனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை சிறுவன் கவியரசன் பரிதாபமாக இறந்தான்.

மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் உயிர் இழந்த சம்பவம் மணலி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story