வெளிநாட்டில் இறந்த ‘எனது மகனின் உடலை மீட்டு தூத்துக்குடி கொண்டுவர வேண்டும்’ : மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் பெண் மனு


வெளிநாட்டில் இறந்த ‘எனது மகனின் உடலை மீட்டு தூத்துக்குடி கொண்டுவர வேண்டும்’ : மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் பெண் மனு
x
தினத்தந்தி 15 Oct 2018 9:45 PM GMT (Updated: 15 Oct 2018 7:50 PM GMT)

‘வெளிநாட்டில் இறந்த எனது மகனின் உடலை மீட்டு தூத்துக்குடிக்கு கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும்‘ என்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் பெண் ஒருவர் மனு கொடுத்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது தூத்துக்குடியை அடுத்த முத்தையாபுரம் கீதாநகரை சேர்ந்த ஜோன் ஆப் ஆர்க் என்ற பெண் சிலருடன் வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

நான் கணவனை இழந்து வாழ்ந்து வருகிறேன். எனது மூத்த மகன் ரஞ்சித் ராம்நாத் (வயது 28) கடந்த 1½ ஆண்டுகளாக சவூதி அரேபியாவில் ஒரு நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தான். கடந்த ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி என் மகன் இறந்து விட்டதாக தொலைபேசி மூலம் எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நான் பொருளாதார நிலையில் மிகவும் கஷ்டப்பட்டவள். என் மகன் இறந்து 60 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. நான் தினந்தோறும் அழுது கொண்டு இருக்கிறேன். எனது மகனின் உடலை மீட்டு தூத்துக்குடிக்கு கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.

ஆழ்கடல் விசைப்படகு மீன்பிடி தொழில் மேம்பாட்டு சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகள் ஆழ்கடல் சென்று மீன்பிடிக்க அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்து இருந்தோம். வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையின் அடிப்படையில் மத்திய அரசின் கடல் ஒழுங்குமுறை சட்ட விதிப்படி இடைக்கால சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். அதன்படி இடைக்கால சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால் காலை 5 மணிக்கு கடலுக்கு சென்றுவிட்டு இரவு 9 மணிக்குள் கரை திரும்ப வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இது சட்டத்திற்கு மாறாக இருந்ததால் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இதற்கு இடைக்கால தடை ஆணை பெற்றோம். எனவே இன்று (அதாவது நேற்று) முதல் மீன்வளத்துறை உதவி இயக்குனர் வழங்கிய இடைக்கால சான்றிதழ்படி ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்ல இருக்கிறோம்‘ என்று கூறப்பட்டு இருந்தது.

தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம் தாலுகாக்களில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் தனியார் காற்றாலை நிறுவனம் சார்பில் அந்தந்த பகுதிகளில் அனுமதி பெறாமல் நடப்பட்ட மின்கம்பங்கள் குறித்தும், அரசு புறம்போக்கு இடங்கள் மற்றும் ஓடைகளில் நடப்பட்ட மின்கம்பங்கள் குறித்தும் விவரங்கள் பெற்று, அனுமதி பெறாமல் நடப்பட்ட அந்த மின்கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்துக்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்டு உள்ள டாஸ்மாக் கடையினால் தற்போது மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் என அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். நீதிமன்ற உத்தரவுபடி, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அந்த டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும்‘ என்று கூறி இருந்தார்.

மதசார்பற்ற ஜனதாதளம் மாநில துணை தலைவர் சொக்கலிங்கம் கொடுத்த மனுவில், ‘தூத்துக்குடி மாநகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக முன்அறிவிப்பின்றி திடீர் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இதனால் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே தடையில்லா மின்சாரம் வினியோகம் செய்யப்பட வேண்டும். மேலும் பழுதடைந்த நிலையில் இருக்கும் மின்கம்பங்களை விரைவில் மாற்றி அமைக்க வேண்டும்‘ என்று கூறி இருந்தார்.

தூத்துக்குடி டேவிஸ்புரத்தை சேர்ந்த திருநங்கை பூமிகா என்பவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் பேசிய வீடியோவில் இந்துக்களின் மனம் புண்படும் வகையில் பேசி உள்ளதாகவும், எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிஇருந்தார். ஸ்ரீவைகுண்டம் பூவானி லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கொடுத்த மனுவில், ‘எங்கள் ஊரில் தாண்டவிராயன் குளம் உள்ளது. இந்த குளத்தை நம்பி சுமார் 100 பேர் 60 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் தற்போது அந்த விவசாய இடத்தை நாங்கள் ஆக்கிரமித்து உள்ளதாக கூறி, எங்களை காலி செய்ய சொல்லி நோட்டீசு வந்து உள்ளது. எனவே எங்கள் மனுவை விசாரித்து நஞ்சை அனாதி நிலத்துக்கு பட்டா வழங்க வேண்டும்‘ என்று கூறி இருந்தனர்.

வடக்கு காரச்சேரி அ.தி.மு.க. கிளை செயலாளர் தங்கபாண்டி என்பவர் கொடுத்த மனுவில், ‘தீண்டாமையை ஒழிக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாதி, மத சான்றிதழை முழுமையாக நீக்க வேண்டும். அதற்கு மாவட்ட கலெக்டர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறி இருந்தார்.


Next Story