பா.ஜனதாவின் விமர்சனத்திற்கு மக்கள் பதில் அளிப்பார்கள் நாடாளுமன்ற இடைத்தேர்தலை எந்த கட்சியும் விரும்பவில்லை குமாரசாமி பேட்டி
பா.ஜனதாவின் விமர்சனத்திற்கு மக்கள் பதில் அளிப்பார்கள் என்றும், கர்நாடகத்தில் நாடாளுமன்ற இடைத்தேர்தலை எந்த கட்சியும் விரும்பவில்லை என்றும் குமாரசாமி கூறினார்.
பெங்களூரு,
முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள ராமநகர், ஜமகண்டி மற்றும் நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம்(நவம்பர்) 3-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் அமர்ந்து பேசி முடிவு செய்துள்ளனர். அதன்படி ராமநகர், மண்டியா ஆகிய தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும், ஜமகண்டி, பல்லாரி ஆகிய தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
சிவமொக்கா தொகுதியில் வேட்பாளரை நிறுத்துவது இல்லை என்று காங்கிரஸ் கூறியது. இதையடுத்து காங்கிரஸ் ஆதரவுடன் எங்கள் கட்சி போட்டியிடுகிறது. சிவமொக்கா தொகுதியை விட்டுக்கொடுத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மண்டியாவில் சிவராமேகவுடா, ராமநகரில் அனிதா குமாரசாமி, சிவமொக்காவில் மது பங்காரப்பா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெறும் இந்த இடைத்தேர்தல் கர்நாடகத்தை பொறுத்தவரையில் அரை இறுதியை போன்றது ஆகும். கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து, எங்களை பா.ஜனதாவினர் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்து வருகிறார்கள்.
இந்த இடைத்தேர்தலில் பா.ஜனதாவின் விமர்சனத்திற்கு மக்கள் தக்க பதில் அளிப்பார்கள். ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பே இறுதியானது. நாடாளுமன்ற இடைத்தேர்தலை கர்நாடகத்தில் எந்த கட்சியும் விரும்பவில்லை. இவ்வாறு தேர்தல் தேதி அறிவிப்பார்கள் என்று யாரும் எதிர்பார்த்து இருக்கவில்லை. ஆனால் தவிர்க்க முடியாத நிலையில் இந்த இடைத்தேர்தலை நாங்கள் எதிர்கொள் கிறோம்.
சிவமொக்காவில் மது பங்காரப்பா போட்டியிடுவது கடவுளின் விருப்பம். சட்டமன்ற தேர்தலில் மதுபங்காரப்பா தோல்வி அடைவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று கணித்த சொரப் தொகுதியில் தான் அவர் போட்டியிட்டார். நாங்கள் வெற்றிபெறுவோம் என்று கணித்த தொகுதிகளில் அந்த தொகுதிதான் முதல் இடத்தில் இருந்தது. ஆனாலும் மதுபங்காரப்பா தோல்வி அடைந்துவிட்டார்.
அவர் வெற்றி பெற்றிருந்தால் மந்திரியாகி இருப்பார். அவரை மந்திரியாக்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு உண்டு. மது பங்காரப்பா வெற்றி பெறுவார். இதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்களின் தனிப்பட்ட பகைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தேசிய அளவில் நிலவும் அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இணைந்து பணியாற்ற வேண்டும்.
இடைத்தேர்தலில் 5 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். நான் 2 தொகுதியில் வெற்றி பெற்றேன். இதனால் ராமநகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தேன். அப்போது, அந்த தொகுதி மக்கள், எங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தான் போட்டியிட வேண்டும் என்று என்னிடம் வலியுறுத்தினர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, எனது மனைவி அனிதா குமாரசாமியை ராமநகர் தொகுதியில் நிறுத்தி இருக்கிறேன். தொண்டர்களின் விருப்பத்திற்கு எதிராக நாங்கள் நடந்துகொள்ள மாட்டோம்.
இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு பா.ஜனதாவினர், கூட்டணி ஆட்சி மீது கடுமையான சொற்களை பயன்படுத்தி விமர்சனம் செய்ய மாட்டார்கள் என்று நான் கருதுகிறேன். எனது அலுவலகத்தில் 400 ஊழியர்களை நியமித்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
எனது அலுவலகத்தில் நிரந்தர ஊழியர்களாக 250 பேர் பணியாற்றுகிறார்கள். அத்துடன் இரவல் அடிப்படையில் 56 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனதா தரிசனத்தில் உதவி கேட்டு வந்தவர்களில் ஏழைகள் 6 பேருக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கி இருக்கிறேன். இவ்வளவு எண்ணிக்கையிலான ஊழியர்கள் தான் முந்தைய ஆட்சி காலங்களிலும் இருந்தனர். இது புதிது ஒன்றும் கிடையாது.
நான் தனி விமானத்தை பயன்படுத்துவது இல்லை. பெரும்பாலும் பயணிகள் விமானத்தையே பயன்படுத்துகிறேன். இதனால் அரசுக்கு ஏற்படும் செலவை குறைக்கிறேன். மந்திரிகளுக்கு புதிய கார் கூட வாங்க அனுமதி வழங்கவில்லை. இடைத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) தலைவர்கள் இணைந்து பிரசாரம் செய்வார்கள்.
மாயாவதி உத்தரவின் அடிப்படையில் மந்திரி என்.மகேஷ் பதவியை ராஜினாமா செய்துள்ளார். காரணம் என்ன என்பது எனக்கு தெரியாது. இது அவரது உட்கட்சி விவகாரம். இந்த விஷயத்தில் நான் கருத்து சொல்ல முடியாது. எங்கள் கூட்டணியை விட்டு பகுஜன் சமாஜ் விலகவில்லை.
அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி போட்டியிடும். பகுஜன் சமாஜ் கட்சி எங்களுடனேயே இருக்கும். அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வோம்.
இவ்வாறு குமாரசாமி கூறினார். இந்த பேட்டியின்போது மது பங்காரப்பா, டி.ஏ. ஷரவணா எம்.எல்.சி. உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story