நெல்லையில் மகா புஷ்கர விழா: ஆற்றில் நீராடிய பெண் தவறவிட்ட நகையை மீட்டு ஒப்படைத்த போலீசார்


நெல்லையில் மகா புஷ்கர விழா: ஆற்றில் நீராடிய பெண் தவறவிட்ட நகையை மீட்டு ஒப்படைத்த போலீசார்
x
தினத்தந்தி 15 Oct 2018 9:30 PM GMT (Updated: 15 Oct 2018 8:25 PM GMT)

நெல்லையில் மகா புஷ்கர விழாவையொட்டி தாமிரபரணி ஆற்றில் நீராடியபோது பெண் தவறவிட்ட நகையை போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.

நெல்லை, 

தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி நெல்லை அருகன்குளத்தில் ஜடாயு துறையில் தினமும் ஏராளமானோர் நீராடி வருகின்றனர். எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை முன்பு நேற்று சிறப்பு யாகசாலை பூஜைகள், பக்தி சொற்பொழிவு நடைபெற்றது. போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா தலைமையில், போலீசார் முத்துப்பாண்டி, கார்த்திக், ராஜா, மணிவேந்தன் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த செல்வராஜ் மனைவி கலைவாணி (வயது 43) என்பவர் குடும்பத்தினருடன் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார். அப்போது கலைவாணி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டது. நீராடிவிட்டு வெளியே வந்த கலைவாணி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் கதறி அழுதபடி கூறினார்.

இதையடுத்து போலீசார் உடனடியாக ஆற்றுக்குள் கலைவாணி குளித்த பகுதியில் இறங்கி தேடினர். அப்போது சென்னை பூந்தமல்லி பட்டாலியன் போலீஸ்காரர் கார்த்திக் தண்ணீருக்குள் ஒரு புதரில் சிக்கி இருந்த கலைவாணியின் நகையை கண்டுபிடித்தார். பின்னர் அந்த நகையை மீட்டு வந்து கலைவாணியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

தவறவிட்ட நகையை போலீசார் உடனடியாக மீட்டு ஒப்படைத்ததால் மகிழ்ச்சி அடைந்த கலைவாணி குடும்பத்தினர் போலீசாருக்கு கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர். மேலும் அங்கு நின்றிருந்த பொதுமக்கள் போலீசாரை வெகுவாக பாராட்டினர். 

Next Story