கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Oct 2018 9:45 PM GMT (Updated: 15 Oct 2018 8:28 PM GMT)

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி ஒருவர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை, 

நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள தாதனூத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 37). மாற்றுத்திறனாளியான இவர், தாழையூத்து பஜாரில் உள்ள பொது சுகாதார வளாகத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி கவிதா (25). இவர்களுக்கு 4 வயதில் சொர்ணா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் பெருமாள் நேற்று காலை நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர், திடீரென தனது கையில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய்யை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டு இருந்த போலீசார் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர்.

பின்னர் பெருமாள் கலெக்டர் ஷில்பாவிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், “எனது மனைவி கவிதா தினந்தோறும் எனக்கு சாப்பாடு கொடுக்க வருவார். அப்போது அவருக்கும், ராஜாகுடியிருப்பை சேர்ந்த சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் தனிமையில் சந்தித்து வந்தனர். இதை கேள்விப்பட்ட நான் எனது மனைவியை தட்டிக் கேட்டேன். அவர் கோபித்துக் கொண்டு, தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதுகுறித்து நான் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். நெல்லை புறநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் விசாரணை நடத்தினார்கள். இதை அறிந்த அவர், என் மீது போலீஸ் நிலையத்தில் ஏன் புகார் கொடுத்தாய் என்று கூறி என்னை தாக்கினார். எனது மனைவியை மீட்டு தர வேண்டும். ராஜாகுடியிருப்பை சேர்ந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

பின்னர் பெருமாளை போலீசார் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் பெருமாள் விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கந்து வட்டி கொடுமையால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story