விழுப்புரம் மாவட்டத்தில்: நியாயவிலைக்கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம் - 1,800 கடைகள் அடைப்பு


விழுப்புரம் மாவட்டத்தில்: நியாயவிலைக்கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம் - 1,800 கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 16 Oct 2018 3:15 AM IST (Updated: 16 Oct 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் நியாயவிலைக்கடை பணியாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் 18,00 நியாயவிலைக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

விழுப்புரம், 

ஊதிய உயர்வு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் அக்டோபர் 15-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக்கடை பணியாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். விழுப்புரம் மாவட்டத்திலும் நியாயவிலைக்கடை பணியாளர்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டம் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நியாயவிலைக்கடைகள் பூட்டிக்கிடந்தது. இதனால் நியாயவிலைக்கடைகளுக்கு வந்த குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க நிர்வாகி கோபிநாத் கூறுகையில்,

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 2,800 நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. நேற்று 1,800 கடைகள் திறக்கப்படவில்லை. 60 சதவீத பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை (அதாவது இன்று) செவ்வாய்க்கிழமை விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டமும், நாளை (புதன்கிழமை) மறியல் போராட்டமும் நடத்த உள்ளோம் என்றார்.

Next Story