30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடைகள் அடைப்பு- ஆர்ப்பாட்டம்


30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடைகள் அடைப்பு- ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Oct 2018 11:00 PM GMT (Updated: 15 Oct 2018 9:57 PM GMT)

30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டன. மண்ணச்சநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமயபுரம்,

ரேஷன் கடை பணியாளர் களுக்கு ஊதிய மாற்றம் செய்யும் வரை இடைக்கால நிவாரணம் வழங்குவது, சரியான எடையில் பொருட்கள் வழங்க வேண்டும். பொட்டல முறையை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியம், மருத்துவபடி உயர்வு, பணிவரன்முறை உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் ரேஷன்கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு வேலை நிறுத்த போராட்டம் நடந்தால், பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகளால் அனைத்து மாவட்டத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

ரேஷன் கடை பணியாளர்களில் ஒரு பிரிவினர், வழக்கம்போல ரேஷன் கடைகளை திறந்து பணிகளை செய்தனர். அதன்படி, திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் அனைத்து ரேஷன் கடைகளும் திறக்கப்பட்டு பணிகள் நடந்தது. அதே வேளையில் திருச்சி புறநகர் பகுதிகளில் தமிழ்நாடு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று ரேஷன் கடைகளை அடைத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, இணைச் செயலாளர் பிரகாஷ், பொருளாளர் பிச்சைரத்தினம் மற்றும் பலர்் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டம் தொடர்பாக மாவட்ட செயலாளர் அண்ணாதுரை கூறுகையில், “திருச்சி மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான லால்குடி, முசிறி, தொட்டியம், மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட ரேஷன்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த போராட்டம் நாளையும்(அதாவது இன்று) நீடிக்கும்” என்றார்.

இதற்கிடையே திருச்சி மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான ரேஷன்கடைகள் மூடப்பட்டதால், கடைக்கு அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க வந்த ஏழை-எளிய மக்களான நுகர்வோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Next Story