ரோஸ்மில்கில் வி‌ஷம் கலந்து கொடுத்தார்: 6 வயது மகளை கொன்று தந்தை தற்கொலை முயற்சி தூத்துக்குடியில் குடும்பத்தகராறில் பரிதாபம்


ரோஸ்மில்கில் வி‌ஷம் கலந்து கொடுத்தார்: 6 வயது மகளை கொன்று தந்தை தற்கொலை முயற்சி தூத்துக்குடியில் குடும்பத்தகராறில் பரிதாபம்
x
தினத்தந்தி 16 Oct 2018 9:30 PM GMT (Updated: 16 Oct 2018 1:30 PM GMT)

தூத்துக்குடியில் ரோஸ்மில்கில் வி‌ஷம் கலந்து கொடுத்து மகளை கொன்ற தந்தை தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் ரோஸ்மில்கில் வி‌ஷம் கலந்து கொடுத்து மகளை கொன்ற தந்தை தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

குடும்ப தகராறு 

தூத்துக்குடி ராஜீவ்நகர் 8–வது தெருவை சேர்ந்தவர் மகேசுவரன் (வயது 40). இவர் துபாயில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி கங்கா (26). இவர் தூத்துக்குடி குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகள் சன்விகா (6). இவள் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 2–ம் வகுப்பு படித்து வந்தாள்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மகேசுவரன் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்து விட்டார். அதன்பிறகு அவர் வெளிநாட்டுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் வெளிநாடு செல்வதற்காக மகேசுவரன் தனது மனைவியிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

குழந்தை சாவு 


நேற்று முன்தினம் கங்கா வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு, மாலையில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது மீண்டும் கணவன்–மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனவேதனை அடைந்த மகேசுவரன், வீட்டில் இருந்த மகள் சன்விகாவுடன் வெளியில் சென்று விட்டார். சிறிது நேரத்துக்கு பின்னர் மீண்டும் வந்த மகேசுவரன், மகளை வீட்டில் விட்டு விட்டு வெளியில் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு சன்விகா வீட்டில் தூங்கி கொண்டு இருந்தாள். சிறிது நேரத்தில் அவள் வாந்தி எடுத்தாள். இதனால் அதிர்ச்சி அடைந்த கங்கா, சன்விகாவை நேற்று அதிகாலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். சில மணி நேரம் கழித்து மகேசுவரனும் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சன்விகா, மகேசுரவன் ஆகிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று காலையில் சிறுமி சன்விகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மகேசுவரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரோஸ்மில்கில் வி‌ஷம் கொடுத்து கொலை 


இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மகேசுவரன் வெளிநாடு செல்வதற்கு தனது மனைவியிடம் பணம் கேட்டு வந்தார். இதனால் கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மகேசுவரன் தனது மகள் சன்விகாவை வெளியில் அழைத்து சென்றார். அங்குள்ள ஒரு கடையில் மகேசுவரன் ரோஸ்மில்க் வாங்கி, அதில் வி‌ஷத்தை கலந்து மகளுக்கு கொடுத்து உள்ளார். அதன்பிறகு தானும் வி‌ஷம் கலந்த ரோஸ்மில்கை குடித்து இருந்தது தெரியவந்தது. பின்னர் மகளை வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்ற மகேசுவரன் ரோட்டில் மயங்கி கிடந்துள்ளார். அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து உள்ளனர்.

பரிதாபம் 

மகேசுவரன் வெளிநாடு செல்ல பணம் கிடைக்காததால் மகளை கொன்று தற்கொலைக்கு முயன்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மகளை கொன்று தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story