பொதுபணியிட மாறுதல் வழங்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பொதுபணியிட மாறுதல் வழங்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2018 4:30 AM IST (Updated: 16 Oct 2018 10:35 PM IST)
t-max-icont-min-icon

பொதுபணியிட மாறுதல் வழங்கக்கோரி தஞ்சையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யூ.) சார்பில் தஞ்சையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், துணை செயலாளர் அன்பு, டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வீரையன், பொருளாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கவேண்டும். தஞ்சை மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். டாஸ்மாக் ஊழியர்கள் மரணம் அடைந்தாலோ, வேறு பணிக்கு சென்றாலோ அவர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும்.


பணிவரன்முறைப்படுத்த வேண்டும். பொது பணியிட மாறுதல் வழங்க வேண்டும். மதுக்கூட நிலுவை தொகை வசூலிக்கும் நோக்கத்தோடு மூடப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளை உடனே திறக்க வேண்டும். ஓய்வு பெறும் கடை ஊழியர்களுக்கு சிறப்பு பணமுடிப்பு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட ஊக்கத்தொகையை நிலுவையுடன் வழங்க வேண்டும். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் முறைசாரா சங்க மாவட்ட செயலாளர் பேர்நீதிஆழ்வார், தரைக்கடை சங்க மாவட்ட தலைவர் மணிமாறன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் செங்குட்டுவன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story