உத்தமபாளையம், கம்பம் பகுதிகளில் தொடரும் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் : போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த கோரிக்கை


உத்தமபாளையம், கம்பம் பகுதிகளில் தொடரும் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் : போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த கோரிக்கை
x
தினத்தந்தி 16 Oct 2018 9:30 PM GMT (Updated: 16 Oct 2018 5:22 PM GMT)

உத்தமபாளையம் உட்கோட்ட பகுதிகளில் தொடரும் திருட்டு, வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தமபாளையம்,


உத்தமபாளையம் உட்கோட்ட பகுதியில் கம்பம், கூடலூர் ஆகிய 2 நகராட்சிகள், உத்தமபாளையம், க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பேரூராட்சிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் இருந்து ஜவுளி, உள்ளிட்ட பொருட்கள் வாங்க கம்பம் பகுதிக்கு தான் செல்கின்றனர். இதேபோல் கேரள மாநில எல்லைப்பகுதியில் கம்பம் அமைந்துள்ளதால் அங்குள்ள மக்களும் அதிகளவு வந்து செல்கின்றனர். இதனால் கம்பம் பகுதியில் போக்குவரத்து அதிகளவில் இருக்கும். சமீப காலமாக கம்பம், உத்தமபாளையம் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதேபோல் தனியாக நடந்து செல்லும் பெண்களை ‘குறி’ வைத்து நகை பறிக்கும் கும்பலும் சுற்றித்திரிகின்றன. இதனால் பெண்கள் வெளியில் நடமாடவே அச்சம் அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் இன்னும் சில தினங்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி புத்தாடை வாங்குவதற்கு கம்பம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு பொதுமக்கள் அதிகளவில் வருவார்கள். இதை வாய்ப்பாக பயன்படுத்தி மர்மநபர்கள் தங்களது கைவரிசையை காட்டுவார்கள். எனவே கம்பம், உத்தமபாளையம் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கம்பம் பகுதியில் திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள். ஏற்கனவே இங்கு திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இதை தடுக்க 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் அச்சம் இன்றி செல்ல கம்பம், உத்தமபாளையம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளோம். மேலும் சாதாரண உடை அணிந்தும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் மத்தியில் சந்தேகப்படும்படி மர்மநபர்கள் சுற்றி திரிந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.

Next Story