பா.ம.க. மாநில துணைத்தலைவர் தஞ்சை கோர்ட்டில் ஆஜர் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு


பா.ம.க. மாநில துணைத்தலைவர் தஞ்சை கோர்ட்டில் ஆஜர் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 Oct 2018 11:00 PM GMT (Updated: 16 Oct 2018 5:23 PM GMT)

கும்பகோணம் அருகே இருபிரிவினர் இடையே நடந்த மோதல் தொடர்பான வழக்கில் பா.ம.க. மாநில துணைத்தலைவர் நேற்று தஞ்சை கோர்ட்டில் ஆஜரானார். இதனையொட்டி தஞ்சை கோர்ட்டில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநீலக்குடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியான ஆடுதுறை காளியம்மன் கோவில் திருவிழா கடந்த 2010–ம் ஆண்டு நடந்தது. இந்த திருவிழாவின் போது இரு பிரிவினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

இதில் பா.ம.க. மாநில துணைத்தலைவர் ம.க.ஸ்டாலின் உள்ளிட்ட 29 பேர் தங்களை தாக்கியதாக கீழமருவத்தூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன், திருநீலக்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.


இந்த வழக்கு தஞ்சை மாவட்ட குடியுரிமை பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து பா.ம.க. மாநில துணைத்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 29 பேரும் நேற்று கோர்ட்டில் ஆஜரானார்கள்.

வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ண ஜெயஆனந்த், வருகிற 22–ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.


பா.ம.க. மாநில துணைத்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் நேற்று கோர்ட்டில் ஆஜரானதை முன்னிட்டு தஞ்சை கோர்ட்டு வளாகத்தில் தஞ்சை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவிசேகர், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் கோர்ட்டு சாலையிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story