கவுன்சிலர் தேர்தலில் கூட கமல்ஹாசனால் வெற்றி பெற முடியாது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி


கவுன்சிலர் தேர்தலில் கூட கமல்ஹாசனால் வெற்றி பெற முடியாது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 17 Oct 2018 4:45 AM IST (Updated: 17 Oct 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

கவுன்சிலர் தேர்தலில் கூட கமல்ஹாசனால் வெற்றி பெற முடியாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

நாகர்கோவில்,

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

நடிகர் கமல்ஹாசனின் கட்சி வளர்ந்தால் அது தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் பெரும் ஆபத்து. அவர் வெளிநாட்டு தீய சக்திகளுடன் பயணிக்கிறாரோ? என்ற சந்தேகம் உள்ளது. ரஜினி ஆன்மிகத்தை சார்ந்தவர், நல்ல மனிதர். எம்.ஜி.ஆர். மக்களோடு இருந்து மாளிகையை பார்த்தவர்.

கமல் மாளிகையில் இருந்து கொண்டு மக்களை பார்க்கிறார். தமிழகத்தை காக்க வந்த ரட்சகர் போல் கமல் நாடகம் ஆடுகிறார். அது தேர்தலுக்கு ஒத்து வராது. கமல்ஹாசனால் கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது. தேர்தல் வந்தால் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும்தான் நிற்கும். மற்ற கட்சிகள் இல்லாமல் போய் விடும்.

தனக்கு வந்த சிறிய பிரச்சினையை கூட தாங்க முடியாமல் வெளிநாட்டுக்கு செல்வேன் என்று கூறிய கமலால் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியாது.

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். கருத்துக்கணிப்பில் கூட இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும் என்று கூறி உள்ளனர்.

பால்வளத்தில் தமிழக வரலாற்றில் மிகப்பெரிய புரட்சி நடந்துள்ளது. கொள்முதல் விற்பனையில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளோம்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் புகார் கூறிவிட்டால், அ.தி.மு.க.வை அழித்து விடலாம் என நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. அவர் பதவி விலக வேண்டியது இல்லை. அவர் மீது தவறு இல்லாததால் பயப்படாமல் உள்ளார். அவர் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். மக்களின் கஷ்டங்களை அறிந்த முதல்-அமைச்சராக உள்ளார்.

சபரிமலை விவகாரத்தில் மக்கள் வழிபாட்டு முறையில் யாரும் தலையிட கூடாது. காலம் காலமாக உள்ள நடைமுறையை மாற்றுவதால் மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்பது எனது கருத்து.

இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story