திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் 50–க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோவிலின் வெளிக்குளத்தை ஒட்டிய பகுதியில் ஆக்கிரமித்து இருந்த ஏராளமான கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.
திருவொற்றியூர்,
சென்னையை அடுத்த திருவொற்றியூரில் வடிவுடையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வெளிக்குளத்தை ஒட்டிய பகுதியில் வியாபாரிகள் 50–க்கும் மேற்பட்ட பூமாலை விற்பனை செய்யும் கடைகளை வைத்து ஆக்கிரமித்து இருந்தனர். இதனால் பக்தர்கள் கோவில் குளத்தை சுற்றி வர முடியாமலும், தெப்ப திருவிழா புறப்பாடு பார்ப்பதற்கும் முடியவில்லை.
எனவே கோவில் குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோவில் நிர்வாகிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை கோவில் உதவி ஆணையர் சித்ராதேவி தலைமையில் அங்கு சென்ற அறநிலையத்துறை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கோவில் குளத்தை ஆக்கிரமித்து இருந்த பூமாலை கடைகளை அதிரடியாக அகற்றினார்கள்.
அப்போது அங்கு வந்த திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.பி. சாமியிடம் பூமாலை கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளை அப்புறப்படுத்த கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கே.பி.பி.சாமி எம்.எல்.ஏ., வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கேட்டு கொண்டார்.
இதனையடுத்து அங்கு இருந்த ஏராளமான கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.