மாவட்டத்தில் 2-வது நாளாக நியாய விலைக்கடை பணியாளர்கள் வேலைநிறுத்தம் : பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் தவிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் 2-வது நாளாக நியாய விலைக்கடை பணியாளர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.
விழுப்புரம்,
ஊதிய உயர்வு, சமவேலைக்கு சம ஊதியம், ஓய்வூதியம், மருத்துவப்படி உயர்வு, பணிவரன்முறை உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நியாய விலைக்கடை பணியாளர்கள் பெரும்பாலானோர் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பெரும்பாலான நியாய விலைக்கடைகள் பூட்டிக்கிடந்தன.
இந்த நிலையில் நேற்றும் 2-வது நாளாக மாவட்டம் முழுவதும் நியாய விலைக்கடை பணியாளர்கள் பணியை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான நியாய விலைக்கடைகள் பூட்டியே கிடந்ததால் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் பெரிதும் தவித்தனர்.
அதுபோல் நியாய விலைக்கடைகளுக்கு தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் இருந்து அத்தியாவசிய பொருட்களை கொண்டு வந்து இறக்கும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி மைதானத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். இணை செயலாளர் கோபிநாத் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர்கள் தனராஜ், பெருமாள் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொருளாளர் ஜெய்கணேஷ் வாழ்த்துரை வழங்கினார்.
இதில் மாவட்ட பொருளாளர் ராஜ், விழுப்புரம் வட்ட செயலாளர் வீரபத்திரன், தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் சீனிவாசன், நிர்வாகி சங்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து கு.பாலசுப்பிரமணியன், நிருபர்களிடம் கூறுகையில், 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று 2-வது நாளாக 1,900 நியாய விலைக்கடைகளை அதன் பணியாளர்கள் திறக்காமல் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும் எங்களது கோரிக்கைகளை அரசு ஏற்காவிடில் நாளை (அதாவது இன்று புதன்கிழமை) தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
Related Tags :
Next Story