கட்டபொம்மன் சிலைக்கு டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்தார்; அ.தி.மு.க.வினரும் குவிந்ததால் பரபரப்பு


கட்டபொம்மன் சிலைக்கு டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்தார்; அ.தி.மு.க.வினரும் குவிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Oct 2018 4:00 AM IST (Updated: 17 Oct 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் கட்டபொம்மன் சிலைக்கு டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க.வினரும் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை,

வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளை முன்னிட்டு, மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவிக்க காலை 9.30 மணி என போலீசார் நேரம் ஒதுக்கி கொடுத்து இருந்தனர்.

இதற்காக நேற்று முன்தினம் இரவே மதுரை பை–பாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் ஒட்டலில் டி.டி.வி.தினகரன் வந்து தங்கி இருந்தார். நேற்று காலை அவர், மாலை அணிவிக்க ஓட்டலில் இருந்து 9 மணிக்கு வேனில் ஊர்வலமாக புறப்பட்டார். வழிநெடுகிலும், அவரது கட்சியினர் வரவேற்பு கொடுத்த வண்ணம் இருந்தனர். இதனால் டி.டி.வி.தினகரனால் குறிப்பிட்ட நேரத்திற்கு அங்கு வரமுடியவில்லை.

இதற்கிடையில் காலை 10.30 மணிக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிக்க போலீசார் நேரம் கொடுத்து இருந்தனர். எனவே அ.தி.மு.க.வினரும் பெரியார் பஸ் நிலைய பகுதியில் திரண்டு வந்து இருந்தனர். ஏற்கனவே அங்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரும் குவிந்து இருந்தனர். எனவே இரு தரப்பினரும் மாறி, மாறி கோ‌ஷம் எழுப்பியபடி இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனவே போலீசார், டி.டி.வி.தினகரன் காலை 11 மணிக்கு மாலை அணிவிக்குமாறு கூறினர். மேலும் அங்கிருந்த இரு தரப்பினரையும் சமரசம் செய்து வைத்தனர்.

அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டியன் மாலை அணிவித்தார். பின்னர் காலை 11.30 மணிக்கு டி.டி.வி.தினகரன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தங்க தமிழ்ச்செல்வன், மாநில இளைஞரணி செயலாளர் டேவிட் அண்ணாத்துரை, மகளிரணி செயலாளர் வளர்மதி ஜெபராஜ், மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயபால், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன், மாநில மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன், மதுரை தெற்கு மாவட்ட மருத்துவரணி தலைவர் டாக்டர் எம்.எஸ்.ஆதித்தன், சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் துரை.தனராஜன், உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் சேதுராமன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் சவுந்திரபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story