காதலித்து திருமணம் செய்த காவலருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் உறவினர்களுடன் தர்ணா


காதலித்து திருமணம் செய்த காவலருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் உறவினர்களுடன் தர்ணா
x
தினத்தந்தி 16 Oct 2018 11:00 PM GMT (Updated: 16 Oct 2018 8:35 PM GMT)

காதலித்து திருமணம் செய்த காவலருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தனது உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயசாந்தி (வயது 21). அடைக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் லோகநாதன் (28). இவர் சிறிது காலம் முசிறி போலீஸ் நிலையத்தில் காவலராக வேலைபார்த்துவிட்டு, தற்போது கடலூர் மாவட்டத்தில் பணிபுரிகிறார். பெரம்பலூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் லோகநாதன் காவலராக பணிபுரிந்த போது, விஜயசாந்திக்கும் லோகநாதனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். பின்னர், கடந்த சில மாதங்களுக்கு முன் திருப்பூர் மாவட்டம், அவினாசி பகுதியில் உள்ள விஜயசாந்தியின் தோழி வீட்டில் தங்கி, இருவரும் திருமணம் செய்து கொண்டதாக விஜயசாந்தி தரப்பில் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, திருச்சி மாவட்டம், துறையூரில் விஜயசாந்தி தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே விஜயசாந்தி 6 மாத கர்ப்பமாக இருந்தாராம். இதையறிந்த, லோகநாதன் மற்றும் அவரது பெற்றோர் கருவை கலைத்தால் மட்டுமே, குடும்பத்துடன் ஏற்றுகொள்வதாக தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, துறையூர் பாலக்கரையில் உள்ள சித்த மருத்துவரிடம் கருவை கலைத்துள்ளார். இதையடுத்து, வீட்டுக்கு அழைத்து செல்ல வற்புறுத்தியதற்கு, லோகநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஏற்க மறுத்து விட்டனர்.

இதுகுறித்து விஜயசாந்தி துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். இதுதொடர்பாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதைதொடர்ந்து பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்ற போது, முசிறி காவல் நிலையத்துக்கு செல்லுமாறு அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த விஜயசாந்தி, தனது கணவருடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க கோரியும், தன்னை ஏற்க மறுத்த அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தனது உறவினர்களுடன் வந்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உட்கார்ந்து சிறிது நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த மகளிர் போலீசார், பேச்சுவார்த்தை மேற்கொண்டதை தொடர்ந்து விஜயசாந்தி மற்றும் அவரது உறவினர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். அதன் பின்பு மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமியிடம் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story