அழகு நிலையம், மசாஜ் சென்டர்களில் சட்டவிரோத செயல்கள் நடந்தால் கடும் நடவடிக்கை; போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


அழகு நிலையம், மசாஜ் சென்டர்களில் சட்டவிரோத செயல்கள் நடந்தால் கடும் நடவடிக்கை; போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 17 Oct 2018 4:15 AM IST (Updated: 17 Oct 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

அழகு நிலையம் மற்றும் மசாஜ் சென்டர்களில் விபசாரம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு மாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை மாநிலம் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து ஆன்லைன் விபசாரம் நடைபெற்று வருகிறது.

இதில் அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் ஒரு சில அழகு நிலையம், மசாஜ் சென்டர்களில் விபசாரம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறப்பு அதிரடிப்படை போலீசார் ரெட்டியார்பாளையம், கோரிமேடு பகுதிகளில் அழகு நிலையங்களிலும், மசாஜ் சென்டர்களிலும் சோதனை நடத்தி விபசார கும்பலை கைது செய்தனர்.

இந்தநிலையில் புதுச்சேரி கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அழகு நிலையம் மற்றும் மசாஜ் சென்டர் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமை தாங்கினார்.

இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மோகன்குமார் (பெரியகடை), செந்தில்குமார் (ஒதியஞ்சாலை), தனசெல்வம் (உருளையன்பேட்டை), ஹேமச்சந்திரன் (முத்தியால்பேட்டை), சப்–இன்ஸ்பெக்டர்கள் சிவப்பிரகாசம், ரமேஷ் ஆகியோரும் அழகு நிலையம் மற்றும் மசாஜ் சென்டர்களின் உரிமையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மாறன் பேசியதாவது:–

புதுவை கிழக்குப்பகுதிக்குட்பட்ட அனைத்து அழகு நிலையங்கள், மசாஜ் சென்டர்கள் உரிய அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை அனைவரின் பார்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டும். இங்கு பணியாற்றும் ஊழியர்கள் முறையான தகுதிச்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு முறைப்படி ரசீது வழங்க வேண்டும். இதில் வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்கள் இருக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம் அமைக்க வேண்டும். அழகு நிலையம் என்ற பெயரில் விபசாரம் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அழகு நிலையம் மற்றும் மசாஜ் சென்டர்களில் அடுத்த வாரம் முதல் திடீர் சோதனை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story