ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ‘சிலாப்’ இடிந்து விழுந்தது : 5 பேர் படுகாயம்


ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ‘சிலாப்’ இடிந்து விழுந்தது : 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 16 Oct 2018 10:15 PM GMT (Updated: 16 Oct 2018 9:01 PM GMT)

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ‘சிலாப்’ இடிந்து விழுந்ததில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஈரோடு, 

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். மேலும், சுமார் 800 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோடு மட்டுமின்றி திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளும் இங்கு சிகிச்சைக்காக வருகிறார்கள்.

உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களின் உறவினர்கள் இரவு நேரத்தில் ஆஸ்பத்திரியின் வளாகத்திலேயே தூங்கி கொள்வது வழக்கம். அவர்கள் ஆஸ்பத்திரியின் பிரதான கட்டிடத்தின் முன்பகுதியில் உள்ள மரத்தடியிலும், கட்டிடத்தை ஒட்டியுள்ள கான்கிரீட் தளத்திலும் தூங்குவார்கள்.

ஆஸ்பத்திரியின் பிரதான கட்டிடம் கடந்த 1960-ம் ஆண்டு 2 தளத்துடன் கட்டப்பட்டது. இந்த தளத்தின் ஜன்னல் ‘சிலாப்’ (சன்சேடு) இடிந்து விழும்போதெல்லாம் அதில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காக கட்டிடத்தின் ஓரமாக கான்கிரீட் தளத்தில் பொதுமக்கள் செல்லக்கூடாது என்பதற்காக சிறிய கம்பி வேலி அமைக்கப்பட்டது. ஆனால் கம்பி வேலியை கடந்து சென்று பொதுமக்கள் தூங்கி வந்தனர். பணியில் உள்ள காவலாளிகளும் தடுக்காததால் பொதுமக்கள் தினமும் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஆஸ்பத்திரி கட்டிடத்திற்கு அருகில் பொதுமக்கள் பலர் தூங்கிக்கொண்டு இருந்தனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஆஸ்பத்திரி கட்டிடத்தின் 2-வது தளத்தில் உள்ள ஜன்னல் ‘சிலாப்’ திடீரென இடிந்து தரையில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது தொப்பென்று விழுந்தது. நன்றாக அயர்ந்து தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது ‘சிலாப்’ உடைந்து விழுந்ததால் அவர்கள் அதிர்ச்சியடைந்து ஓவென கூக்குரலிட்டனர். திடீரென கூக்குரல் சத்தம் கேட்டதும் அவர்கள் அருகில் மற்றும் ஆஸ்பத்திரி வளாகத்தில் தூங்கி கொண்டிருந்த பலரும் திடுக்கிட்டு எழுந்ததுடன், என்னமோ, ஏதோ நடந்து விட்டது என பதறியடித்து சிதறி ஓடினர். பின்னர் சுதாரித்துக்கொண்டு சிலாப் விழுந்த இடத்தை நோக்கி பலரும் ஓடி வந்தனர்.

‘சிலாப்’ இடிந்து விழுந்ததில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காட்டூர் பகுதியை சேர்ந்த விஜயபாபு (வயது 56), பவானி அருகே மயிலம்பாடியை சேர்ந்த பழனியப்பன்(60), நஞ்சை ஊத்துக்குளியை சேர்ந்த நாச்சி என்பவரின் மனைவி ராமாயம்மாள் (70), ஈரோடு வெண்டிபாளையத்தை சேர்ந்த சுதாகர் (28), பொள்ளாச்சி அருகே உள்ள தென்செங்கம்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் (45) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களுக்கு தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது. அதன்பின்னர் அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இதில் விஜயபாபுவுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். பழனியப்பன், ராமாயம்மாள் ஆகியோர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சுதாகர், செந்தில்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.

இதுகுறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ‘சன்சேடு’ இடிந்து விழுந்து 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story