26 ஆண்டுகளுக்கு பிறகு சித்தன்னவாசல் மலையில் சிவலிங்க வழிபாடு திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்


26 ஆண்டுகளுக்கு பிறகு சித்தன்னவாசல் மலையில் சிவலிங்க வழிபாடு திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 16 Oct 2018 10:30 PM GMT (Updated: 16 Oct 2018 9:03 PM GMT)

சித்தன்னவாசல் மலையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு சிவலிங்க வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசலில் இரு வேறு மலையில் வரலாற்றுசிறப்பு வாய்ந்த குகை ஓவியம், சமணர் படுக்கைகள் உள்ளன. இவ்விரண்டு மலைகளுக்கும் இடையே உள்ள மலையில் சுனை ஒன்று உள்ளது. இது நாவல்சுனை என்று அழைக்கப்படுகிறது. இந்த சுனையானது சுமார் 10 அடி ஆழம் கொண்டது. இதன் அடி பக்கத்தில் சிவலிங்கம் உள்ளது. இந்த சுனையில் எப்போதும் தண்ணீர் இருப்பதால் இந்த சிவலிங்கம் தண்ணீரிலே மூழ்கியே இருக்கும். இந்நிலையில் சித்தன்னவாசல் கிராமத்தினர் சுனையில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றி முற்றிலுமாக சுத்தம் செய்தனர். பின்னர், நேற்று அந்த சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். பூஜைகள் முடிந்த பின்னர் மழை பெய்ததால் சிவலிங்கம் மறைந்தது. இந்த வழிபாடு 26 ஆண்டுகளுக்கு பிறகு நடந்ததால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவலிங்கத்தை வழிபட்டனர்.

இது குறித்து யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் அமைப்பின் செயலாளர் எடிசன் கூறுகையில், “எங்கள் அமைப்பின் சார்பில் மரபு நடைபயணம் மேற்கொண்டோம். அதில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து சுனையில் சிவலிங்கம் மூழ்கி இருப்பதை ஊர் மக்களிடம் தெரிவித்தோம். அதன்பிறகு, ஊர் பொதுமக்கள் சார்பில் சுனையில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது“ என்றார்.

சித்தன்னவாசலை சேர்ந்த பூஜகர் சின்னத்தம்பி கூறுகையில், “கடந்த 1992-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் சுனையில் இருந்து முழுவதுமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கடந்த 2 நாட்களாக இந்தப் பணி நடைபெற்றது. இன்று (நேற்று) சுமார் 15 நிமிடம் மட்டும் பக்தர்கள் சிவலிங்கத்தை வழிபட்டனர். அதன் பிறகு மழை பெய்து படிப்படியாக சிவலிங்கம் மறைந்து விட்டது. தண்ணீர் மூழ்கியே இருப்பதுதான் இதன் சிறப்பாகும். இந்த பூஜைக்குப் பிறகு மழை பொழியும். விவசாயம் சிறக்கும்” என்றார்.

இது குறித்து புதுக்கோட்டை ஓய்வு பெற்ற அருங்காட்சியக உதவி இயக்குனர் ராஜாமுகமது கூறுகையில், “மலையை குடைந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது சுமார் 500 ஆண்டுகள் பழமையானதாகும்” என்றார்.

Next Story