கந்தர்வகோட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற 2 வாலிபர்கள் கைது


கந்தர்வகோட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 16 Oct 2018 10:15 PM GMT (Updated: 16 Oct 2018 9:08 PM GMT)

கந்தர்வகோட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கந்தர்வகோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே காட்டுநாவல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முன்னோடியான் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு கோவில் முன்பு இருந்த உண்டியல் உடைக்கப்படும் சத்தம் கேட்டது. இதைக்கேட்ட அங்கிருந்தவர்கள் திருடன்... திருடன்... என சத்தம் போட்டனர். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் அங்கு கூடினர். இதையடுத்து உண்டியலை உடைத்து கொண்டிருந்த 2 வாலிபர்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். அப்போது பொதுமக்கள் 2 பேரையும் கையும், களவுமாக பிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் 2 வாலிபர்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் கந்தர்வகோட்டை தென்றல் நகரை சேர்ந்த மூக்கையா மகன் சேதுநாதன் (வயது 23), கந்தர்வகோட்டை அரண்மனை தெருவை சேர்ந்த பழனியப்பன் மகன் பாறைசுரேஷ் (29) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு உண்டியலை உடைத்த வாலிபர்களை பிடித்ததால் உண்டியல் பணம் தப்பியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story