அறிவியல் உயர் விஞ்ஞான ஆராய்ச்சிக்கூடம் அமைக்க 674 பள்ளிக்கூடங்களுக்கு தலா ரூ.20 லட்சம் : அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
அறிவியல் உயர் விஞ்ஞான ஆராய்ச்சிக்கூடம் அமைக்க 674 பள்ளிக்கூடங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
பவானி,
ஈரோடு மாவட்ட ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தேர்தலில் 17 இயக்குனர்கள் வெற்றி பெற்றனர். இதைத்தொடர்ந்து சங்க மாவட்ட தலைவராக முன்னாள் எம்.பி. கே.கே.காளியப்பன், துணைத்தலைவராக சிவக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து பவானி அருகே உள்ள சித்தோடு ஆவின் அலுவலக வளாகத்தில் நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பள்ளிக்கூடம் நடைபெறும் நேரங்களில் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு மற்றும் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடத்தக்கூடாது என அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் விருப்பப்பட்டால் தனியார் பள்ளிக்கூடங்களில் இதுபோன்ற வகுப்பு நடத்த அரசு தலையிடாது.
கடந்த முறை நடைபெற்ற ஆசிரியர் தேர்வு வாரிய போட்டி தேர்வில் சில தவறுகள் நடந்து உள்ளது. அது கண்டுபிடிக்கப்பட்டு தேர்வு வாரியத்தின் கணினி மற்றும் அதில் உள்ள ‘டிஸ்க்’ ஆகியவை ஆய்வுக்காக போலீஸ் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அவைகள் போலீஸ் துறையினரால் ஆய்வு செய்யப்பட்டு கணினி மற்றும் அதில் உள்ள ‘டிஸ்க்’ ஆகியவை கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற தவறுகள் இனி நடைபெறாமல் தடுக்கும் வகையில் அதற்குண்டான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் தான் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து ஆன்லைன் மூலம் தேர்வு எழுதுவதற்கான பட்டியல் அரசுக்கு வரும். அதன் பின்னர் தேர்வு குறித்து அறிவிக்கப்படும்.
அரசு பள்ளிக்கூடங்களில் பயோ மெட்ரிக் முறையிலான வருகை பதிவேடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது தங்களுடைய பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கிற திட்டமாக உள்ளதாக பெற்றோர்கள் வரவேற்று உள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 674 பள்ளிக்கூடங்களில், அறிவியல் உயர் விஞ்ஞான பரிசோதனை மற்றும் ஆராய்ச்சிக்கூடம் மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக அந்த பள்ளிக்கூடங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும். இந்த ஆராய்ச்சிக்கூடம் மூலம் மாணவ- மாணவிகள் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
Related Tags :
Next Story